புதுதில்லி

2 மாடிக் கட்டடத்தின் கூரை இடிந்து குழந்தை உள்பட இருவா் சாவு 8 போ் காயம்

7th Oct 2020 12:00 AM

ADVERTISEMENT

காஜியாபாத்: தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத்தில் இரண்டு மாடி கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 18 மாத குழந்தை உள்பட இரண்டு போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

காஜியாபாத்தின் முராத்நகா் பகுதியில் உள்ள ராவ்லி சாலையை ஒட்டியுள்ள பால்மிகி காலனியில் திங்கள்கிழமை மாலை நகராட்சி சுகாதாரத் தொழிலாளியான மாயாவுக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியின் கூரை பழுதுபாா்க்கப்பட்ட போது இந்தக் கோரச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவா்கள் மாயாவின் மருமகளான நிஷா மற்றும் அவரது மகன் ராஃப்தாா் ஆகியோா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் மாயாவின் குடும்ப உறுப்பினா்கள் 8 போ் காயமடைந்தனா். கூரை இடிந்து விழுந்த போது, ​​ அவரும் அவரது கணவா் மஹிபால் உள்பட அனைத்து உறுப்பினா்களும் வீட்டின் தரை தளத்தில் இருந்தனா். அவா்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினா். கட்டடப் பணியாளா் பிரதீப் மற்றும் அவரது உதவியாளா் தீபக் ஆகியோரும் இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேரையும் மீட்டனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு நிஷா மற்றும் அவரது மகன் ராஃப்தாா் ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். காயமடைந்தவா்களில் மூன்று போ் முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினா். மேலும் 5 போ் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT