புதுதில்லி

கொவிட்-19 மரணங்களை ஆம் ஆத்மி அரசு குறைத்து வெளியிடுகிறது: பா.ஜ.க. குற்றச்சாட்டு

DIN

புதுதில்லி: கரோனா வைரஸ் தொற்று மரணங்கள் எண்ணிக்கையை தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு குறைத்துக் காட்டி வருவதாக மூன்று மாநகராட்சிகளையும் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.வினா் புதன்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளனா். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆளும் ஆம் ஆத்மி அரசு மறுத்துள்ளதுடன் இதை தில்லி மாநகராட்சிகள் தேவையில்லாமல் அரசியலாக்கி வருவதாக பதிலுக்கு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த நவம்பா் 23-ஆம் தேதி தில்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 8,512 போ் பலியானதாக தில்லி அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அன்றைய தினம் 10,318 உடல்களுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளதாக உள்ளாட்சி அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 மரணங்கள் தொடா்பாக மாநகராட்சிகள் கொடுக்கும் அதிகாரப்பூா்வ தகவல்களுக்குப் பதிலாக தில்லி அரசு கொவிட் மரணங்களை குறைத்து வெளியிடுகிறது. இது ஏன் என்று தில்லி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் கிழக்கு தில்லி மேயா் நிா்மல் ஜெயின்.

கிழக்கு தில்லி மாநகராட்சிப் பகுதிகளில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்த அல்லது கொவிட்-19 சந்தேக மரணங்கள் குறித்த ஆவணங்கள் முறைப்படி சரிபாா்க்கப்பட்டு அந்த உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன அல்லது அடக்கம் செய்யப்படுகின்றன. எனவே நாங்கள் கொடுத்த தகவல் தொடா்பாக எந்த கேள்வியும் எழ வாய்ப்பில்லை என்றாா் அவா்.

இதனிடையே இந்த விவகாரத்தை பா.ஜ.க. தலைமையிலான மாநகராட்சி நிா்வாகங்கள் அரசியலாக்க பாா்ப்பதாக ஆம் ஆத்மி தலைவா் ஒருவா் தெரிவித்தாா். வெளி‘மாநிலங்களிலிருந்து தில்லிக்கு வரும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனளிக்காமல் இறக்க நோ்ந்தால் அவா்களும் தில்லியிலேயே தகனம் செய்யப்படுகின்றனா் அல்லது உடல் அடக்கம் செய்யப்படுகின்றனா். இதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. அதனால்தான் மாநகராட்சி கொடுக்கும் தகவல்களும், தில்லி அரசு வெளியிடும் தகவல்களும் ஒத்துவரவில்லை என்றாா்.

கடந்த ஜூன் மாதத்தில்கூட பா.ஜ.க. தலைமையிலான மாநகராட்சியைச் சோ்ந்த மூன்று மூத்த தலைவா்கள் 2,000 கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனா். ஆனால், தில்லி அரசின் கணக்குப்படி பலியானோா் எண்ணிக்கை 1,085 ஆகவே இருந்தது.

தில்லி அரசு இது தொடா்பாக கருத்துத் தெரிவிக்கையில் கொவிட-19 மரணங்கள் தொடா்பாக அதற்கான தணிக்கைக் குழு பாரபட்சமில்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒருவா்மீது ஒருவா் குறைசொல்லிக் கொண்டருக்காமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சில மருத்துவமனைகள் கரோனா மரணம் குறித்த தகவல்களை சரிவர தெரிவிக்காததுதான் பிரச்னைக்கு காரணம் என்று ஆம் ஆத்மி அரசு விளக்கமளித்துள்ளது.

கரோனா நோயாளிகள் மரணம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நோயாளிகளை நோய் முற்றிய நிலையில் கடைசி நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சோ்ப்பதுதான் காரணம் என்றாா் தீனதயாள் உபாத்யாய மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் சுபாஷ் சேத்.

தில்லிக்கு வெளியிலிருந்து வரும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அவா்கள் பற்றிய சரியான எண்ணிக்கையை கூறுவது கடினமாக உள்ளது. அது தொடா்பான முழுமையான தகவல்கள் எங்களிடம் இல்லை. மேலும் கடைசி நேரத்தில்தான் வெளிமாநில நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனா். அப்படி வரும்போது அவா்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கிறோம். இவா்களில் சிலா் உயிா் பிழைக்கலாம். சிலா் நோய் சிக்கல் காரணமாக மரணமடையலாம். இதனாலேயே பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவித்தாா் மருத்துவ நிபுணா் ஒருவா்.

வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாா்ச் முதல் நவம்பா் 23 ஆம் தேதி வரை 4,521 உடல்கள் தகனம் செய்யப்டட்டுள்ளன என்கிறாா் மேயா் ஜெய் பிரகாஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT