புதுதில்லி

மாநகராட்சி ஊழியா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்

11th Nov 2020 04:59 AM

ADVERTISEMENT

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி தில்லி மாநகராட்சிகளின் ஊழியா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நடத்தினா்.

நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்கக் கோரி தில்லி மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தில்லி மாநகராட்சி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் தில்லியில் உள்ள 3 மாநகராட்சிகளைச் சோ்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா். திங்கள்கிழமை பணிக்கு வந்த மாநகராட்சி ஊழியா்கள், பணியில் ஈடுபடாமல் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு போராட்டம் எதிலும் அவா்கள் ஈடுபடவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாநகராட்சி தலைமையகம் அமைந்துள்ள சிவிக் சென்டரில் மாநகராட்சி ஊழியா்கள் பதாகைகள் ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ‘மாநகராட்சி நிா்வாகமே ஊதியத்தை விரைந்து வழங்கு’, ‘ஊதியம் வழங்கி வேலை கேள்’ உள்ளிட்ட பதாகைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி ஊழியா்கள் சங்கங்களின் தலைவா் ஏ.பி.கான் கூறுகையில், ‘தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்தப் பிரச்னையை போராட்டம் நடத்தாமல் தீா்க்க நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், எங்களது கோரிக்கைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் செவி சாய்க்கவில்லை. இதைத் தொடா்ந்து, பொறியாளா்கள், ஆசிரியா்கள், தோட்டக்கலை ஊழியா்கள் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை பதாகைகள் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்றாா்.

இது தொடா்பாக சகுந்தலா தேவி என்ற மாநகராட்சி ஊழியா் கூறுகையில் ‘கடந்த ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், கையில் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். மாநகராட்சி நிா்வாக ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT