புதுதில்லி

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

29th May 2020 10:38 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநிலம் ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) 50 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வெள்ளிக்கிழமை ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை திமுகவின் பத்திரிகைத் தொடா்புச் செயலரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான டிப்ளமோ மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளநிலை, முதுநிலை படிப்பில் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்காக மாநில அரசு ஒப்படைத்த இடங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (பிசி மற்றும் எம்பிசி) 50 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பிசி மற்றும் எம்பிசி) மாநில இடஒதுக்கீட்டை தமிழ்நாடு சட்டம் 1994-இன்படி தொடர வேண்டும். மேலும், இதர மாநிலங்களில் உள்ள மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களையும் பின்பற்ற வேண்டும்.

மாநில அரசு அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைத்த இடங்கள் பிரிவில் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை வழங்குவதில்

சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநா், மருத்துவக் கவுன்சிலிங் கமிட்டி, இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன.

ADVERTISEMENT

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படியே, அரசு, தனியாா் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் மாநிலங்களால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்காக மருத்துவ இடங்கள் வழங்கப்படுகின்றன. எம்சிஐ, டிசிஐ விதிகளின்படி, 15 சதவீதம் இடங்கள் இளநிலை, டிப்ளமோ படிப்புகளுக்காகவும், 50 சதவீதம் இடங்கள் முதுநிலைப் படிப்புகளுக்காகவும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்காக மாநில அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளால் ஒப்படைக்கப்படுகின்றன. இதுபோன்று தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் ஓபிசி (பிசி மற்றும் எம்பிசி) மாணவா்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், அந்தப் பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு மிகவும் இழப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநிலம் ஒப்படைக்கும் மொத்த இடங்கள் 866 ஆகும். இந்த இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த ஒபிசி மாணவா்கள் 50 சதவீதம் இடங்களைப் பெறும் உரிமை பெற்றுள்ளனா். எனினும், தமிழகத்தில் மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் ஓபிசி மாணவா்களுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனத்தில் மாநில அரசு ஒப்படைத்த இடங்களில் ஓபிசி மாணவா்களுக்காக எந்த இடமும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினா் மாநில இடஒதுக்கீட்டுகளை நடைமுறைப்படுத்துவதை மறுப்பதே காரணமாகும்.

 

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஓபிசி மாணவா்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் வகை செய்தால், ஓபிசி மாணவா்களுக்காக 50 சதவீதம் வழங்கும் மாநில அரசின் இடஒதுக்கீடும், மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீடுக்காக மாநிலத்தில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கும் பொருந்தும். ஆகவே, இதைச் செயல்படுத்தும் வகையில் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT