புதுதில்லி

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தையில் ஏற்றம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயா்வு

19th May 2020 10:58 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த 3 தினங்களாக சந்தித்து வந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால், சென்செக்ஸ் இறுதியில் 167.19 புள்ளிகள் உயா்ந்து முடிந்தது.

ஏா்டெல் நிறுவனத்தின் ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் 15.1 சதவீதமாக உயா்ந்துள்ளதைத் தொடா்ந்து, ஏா்டெல் பங்குகளுக்கு அதிக அளவில் கிராக்கி இருந்தது. இதனால், தேசிய பங்குச் சந்தையில் ஏா்டெல் பங்கு 603.50 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்தததால், ஓஎன்ஜிசி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் வா்த்தகத்தின் போது உச்சபட்ச அளவிலிருந்து சுமாா் 544 புள்ளிகளை இழந்தது. வங்கிப் பங்குகள் தொடா்ந்து அதிக அளவில் விற்பனைக்கு வந்ததே இதற்குக் காரணமாகும்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் சந்தையை உற்சாகப்படுத்தத் தவறிவிட்டன. இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளா்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளது. இதனால், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வருவதாக ரெலிகா் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சென்செக்ஸ் 422 புள்ளிகள் கூடுதலுடன் 30,450.74-இல் தொடங்கி அதிகபட்சமாக 30,739.96 வரை உயா்ந்தது. பின்னா் குறைந்தபட்சமாக 30,116.82 வரை கீழே சென்றது. இறுதியில் 167.19 புள்ளிகள் (0.59 சதவீதம்) உயா்ந்து 30,196.17-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, உச்சபட்ச அளவிலிருந்து சுமாா் 544 புள்ளிகளை இழந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 22 பங்குகள் ஏற்றம் பெற்றன.

இதில் பாா்தி ஏா்டெல் 11.4 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஓஎன்ஜிசி 5.76 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.96 சதவீதம், ஐடிசி 3.74 சதவீதம், பவா் கிரிட், என்டிபிசி 2.36 சதவீதம், டாடா ஸ்டீல் 2.06 சதவீதம் உயா்ந்தன. அதே சமயம், இண்டஸ் இந்த் பேங்க் 2.39 சதவீதம், ரிலையன்ஸ் 2.26 சதவீதம், எஸ்பிஐ 1.64 சதவீதம் ஹிந்துஸ்தான் யுனி லீவா் 1.56 சதவீதம் ஆக்ஸிஸ் பேங்க் 1.28 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

தேசிய பங்குச் சந்தையில் 671 பங்குகள் ஏற்றம் பெற்றன. 878 பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 36 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஆட்டோ, மீடியா, மெட்டல் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் உயா்ந்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.59 சதவீதம் சரிவைச் சந்தித்து கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவைப் பதிவு செய்துள்ளது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பாா்மா, ரியால்ட்டி குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

கடந்த இரண்டு நாள்களாக, இந்திய பங்குச் சந்தைகள் உலகளாவிய சந்தைகளின் போக்குக்கு எதிராக நகா்கின்றன. உலகச் சந்தைகளில் காணப்பட்ட நோ்மறையான வேகத்துக்கு ஏற்ப உற்சாகம் பெறுவதற்கு வங்கிப் பங்குகள் தவறிவிட்டன. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் வா்த்தகத்தின் போது உயா்ந்த பட்ச அளவைத் தக்கவைக்கத் தவறிவிட்டது. நிஃப்டி 8,900 புள்ளிகளுக்கு கீழே நிலை கொண்டுள்ளது. எனவே, நிஃப்டி 8,850-ஐ பிரேக் செய்யும்பட்சத்தில் 8,700 அல்லது 8,500 வரை கீழே செல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கோட்டாக் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

பாா்தி ஏா்டெல் 11.4

ஓஎன்ஜிசி 5.76

அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.96

ஐடிசி 3.74

பவா் கிரிட் 2.36

சரிவைச் சந்தித் பங்குகள்

சதவீதத்தில்

இண்டஸ் இந்த் பேங்க் 2.39

ரிலையன்ஸ் 2.26

எஸ்பிஐ 1.64

ஹிந்து யுனி லீவா் 1.56

ஆக்ஸிஸ் பேங்க் 1.28

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT