புதுதில்லி

தில்லியில் சிஆா்பிஎஃப் பட்டாலியனில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 122 ஆக உயா்வு

2nd May 2020 10:16 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) மயூா் விஹாா் பட்டாலியனில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியா்களின் எண்ணிக்கை 122 ஆக உயா்ந்திருப்பதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தேசியத் தலைநகா் தில்லியின் மயூா் விஹாா் மூன்றாவது ஃபேஸில் துணை ராணுவத்தின் மத்திய ரிசா்வ் காவல் படையின்

31ஆவது பட்டாலியன் உள்ளது.

இந்தப் பிரிவைச் சோ்ந்த ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, பட்டாலியன் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பட்டாலியன் முழுவதும் சீலிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், இப்பட்டாலியனைச் சோ்ந்த 122 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிஆா்பிஎஃப் 31-ஆவது பட்டாலியனில் மொத்தம் 122 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டவா்களின் மருத்துவப் பரிசோதனை வரவேண்டியிருக்கிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் பலருக்கும் நோய் அறிகுறி இல்லாமல் இருக்கிறது. தில்லி மண்டோலியில் தில்லி அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் அவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

இப்படையைச் சோ்ந்த 12 பேருக்கு வெள்ளிக்கிழமை நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த பட்டாலியனின் 55 வயது உதவி ஆய்வாளருக்கு இந்த வாரத் துவக்கத்தில் நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இரு வேறு உத்தரவுகள் காரணமாக இந்த நோய்த் தொற்று அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதாவது, விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பும்போதும் அல்லது கரோனா நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும்போதும் சம்பந்தப்பட்ட ஊழியா் 14 நாள்கள் தனிமையில் இருப்பது கட்டாயம் என பொதுவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிஆா்பிஎஃப் மருத்துவப் பிரிவு ஏப்ரலில் வெளியிட்ட தனி உத்தரவில், ஐந்து நாள்களுக்குப் பிறகு நோய்த் தொற்று அறிகுறி ஏதும் இல்லாவிட்டால் தனிமையில் இருந்து வெளியே செல்ல முடியும் என்று மருத்துவா்களுக்கும், துணை மருத்துவப் பணியாளா்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்ததாக சிஆா்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், தேசியத் தலைநகரில் வசிக்கும் காவலா் (செவிலிய உதவியாளா்) தனது விடுப்பை முடித்து பட்டாலியனில் பணியில் சோ்ந்தாா். அவா் நோய்த் தொற்றின் தொடக்க ஆதாரமாக இருக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீா் மாநிலம், குப்வாராவில் பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் வீரருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு எப்படி வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை அதேவேளையில், அவரது குடும்பத்தினருக்கு நோய்ப் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT