கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேசியத் தலைநகரில் உள்ள முக்கியக் கோயில்கள், தேவாலயங்கள், குருத்வாராக்களில் கிருமிநாசினி தூய்மை நடவடிக்கையை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மேற்கொண்டு வருகிறது.
தில்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தில்லி அரசு, மாநகராட்சிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அரசுப் பேருந்துகள், சிற்றுந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் வரக்கூடிய கோயில்கள், தேவாலயங்கள், குருத்வாராக்களில் தூய்மைப் பணி மேற்கொண்டுள்ளதாக என்டிஎம்சி அதிகாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து என்டிஎம்சி மூத்த அதிகாரி கூறுகையில், ‘கரோனா சமூக ரீதியாக பரவாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், எந்த இடத்திலும் 50 பேருக்கும் மேல் கூடக் கூடாது என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், கோயில்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்வதால்
தலைநகரில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் கிருமிநாசினி தூய்மை நடவடிக்கையை என்டிஎம்சி ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோயால் 147 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் 8 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லி அரசு கரோனா வைரஸ் பரவியுள்ள நோயாக அறிவித்து, அனைத்து திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.