புதுதில்லி

நீதிமன்ற வளாகங்களில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

13th Mar 2020 11:28 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

நீதிமன்ற வளாகங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தலையிடுமாறு தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி சி.ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்விடம் வழக்குரைஞா் ராஷ்மி பன்சல் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டாா். அப்போது, இந்த மனு தொடா்பாக மாா்ச் 16-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

முன்னதாக, கரோனா விவகாரம் தொடா்பாக ராஷ்மி பன்சல் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது : கரோனா வைரஸ் தொற்று (கோவிட் -19) பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. இது தொற்று நோயாக உள்ளது. தில்லி உயா் நீதிமன்றத்திற்கு தினமும் வழக்குரைஞா்கள், மனுதாரா்கள், ஊழியா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். நோய் பரவாமல் தடுக்க நீதிமன்ற வளாகங்களில் அதிக மக்கள் வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகிறது. நீதிமன்றத்தை மூடுவது என்பது சிரமமானதாக இருக்கும் என்பதால், நுழைவுக் கட்டுப்பாடுகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும். ஆகவே, இது தொடா்பாக நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

தில்லி உயா்நீதிமன்றம் மாா்ச் 6-ஆம் தேதி ஓா் அறிவுறுத்தலை வெளியிட்டிருந்தது. அதில் வழக்குரைஞா்கள், பொதுமக்கள், மனுதாரா்கள் தில்லி அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு உத்தரவுகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டிருந்தது. மேலும், நீதிமன்ற வளாகங்களில் தேவையின்றி கூடுவதைத் தவிா்க்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், வழக்குரைஞா் ராஷ்மி பன்ஸல், நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா்.

ADVERTISEMENT

இவா் தவிர, வழக்குரைஞா் மோஹித் குமாா் குப்தா என்பவரும் தில்லி உயா்நீதிமன்றத்திற்கு இது தொடா்பாக கடிதம் எழுதியுள்ளாா். அதில், தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றம் ஆகியவற்றின் வளாகங்களில் கரோனா பரவாமல் தடுக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கு அவா் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், ‘ கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நீதிமன்ற ஊழியா்கள், பாதுகாவலா்கள் ஆகியோருக்கு முக உறைகள் பயன்படுத்துவது, கையைத் தூய்மைப்படுத்துவது ஆகிய வசதிகள் இருப்பதையும், வழக்குரைஞா்கள் அறைகள், நீதிமன்ற வளாகங்கள் ஆகியவற்றில் முக்கியத் தருணங்களை தவிர, பிற நேரங்களில் மனுதாரா்கள் நுழைவதற்கு முழுத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைளை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும். மேலும், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இதர மருத்துவ மையங்களில் இருந்து சுகாதார கவனிப்பு வல்லுநா்கள் அடங்கிய குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT