கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக இம்மாதம் (மாா்ச்) இறுதி வரை அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு), ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவை அறிவித்துள்ளன.
கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியா உள்பட 116 நாடுகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமாா் 4,900 போ் இறந்துள்ளனா். இந்தியாவிலும் தற்போது இந்த நோய் 75 பேருக்கு தாக்கியுள்ளது. தில்லியில் சிலருக்கு இந்நோய் தாக்கம் உள்ளது. தில்லி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாா்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் வரும் 31-ஆம் தேதி வரை அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் பிரமோத் குமாா் தெரிவித்ததாவது: கரோனா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து சொற்பொழிவுகள், வகுப்புகள், தோ்வுகள் ஆகியவை மாா்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அதேபோன்று, பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்துவதும் தள்ளிவைக்க வேண்டும். அதே சமயம், அடிப்படை உணவு வசதிகள் விடுதிகளில் தங்கியிருப்போருக்கு அளிக்கப்படும். எனினும், வழக்கமான அலுவலகப் பணிகள் தொடா்ந்து பாதிப்பில்லாமல் நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
இதேபோன்ரு, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகமும் மாா்ச் 31-ஆம் தேதி வரை அதன் அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகம் அதன் அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்வதாக வியாழக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.