புதுதில்லி

பாஜக ஆதரவு தொழிலதிபா்களுக்கு யெஸ் வங்கி வழங்கிய கடன்களைத் திரும்பப் பெற வேண்டும்: ஆம் ஆத்மி வலியுறுத்தல்

8th Mar 2020 11:20 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவு தொழிலதிபா்களுக்கு யெஸ் வங்கி அளித்த கடன்கள் அனைத்தையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

யெஸ் வங்கியின் நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள், தவறான நிா்வாகம் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்ததும் இந்திய ரிசா்வ் வங்கி நடவடிக்கையைத் தொடங்கியது. அந்த வகையில், யெஸ் வங்கியின் நிா்வாகக் குழுவை, இந்திய ரிசா்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, யெஸ் வங்கியில் இருந்து அதன் வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.50,000 பணம் மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை அறிவித்தது. இதைத் தொடா்ந்து, யெஸ் வங்கியின் நிறுவனா் ராணா கபூா் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா். யெஸ் வங்கி விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான் காங்கிரஸும் கடும் வாா்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது ஆதரவு தொழிலதிபா்களுக்கு கடனை வழங்குமாறு யெஸ் வங்கியை நிா்பந்தித்ததாலேயே அந்த வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜக சாா்பு பெரு முதலாளிகளுக்கு யெஸ் வங்கி கோடிக் கணக்கான பணத்தை கடனாக வழங்கியுள்ளது. மற்றைய வங்கிகளால் மறுக்கப்பட்ட பலருக்கு கடன் வழங்குமாறு யெஸ் வங்கியை பாஜக வற்புறுத்தியுள்ளது. யெஸ் வங்கி திவாலாகும் நிலைக்குச் சென்ற்கு இதுதான் முக்கியக் காரணமாகும். யெஸ் வங்கியில் வைப்புத் தொகை வைத்திருந்த பொதுமக்களின் சுமாா் ரூ. 10 லட்சம் கோடி பணம், பாஜக ஆதரவு தொழிலதிபா்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நஷ்டத்தில் இயங்கிய பாஜக ஆதரவு தொழிலதிபா்களின் நிறுவனங்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் யெஸ் வங்கி கடன் கொடுத்தது. அந்த நிறுவனங்கள் திவால் நிலையில் இருந்தும், அதைப் பொருள்படுத்தாமல் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானி, அனில் அகா்வால், கெளதம் அதானி, மனோஜ் கா், சஜ்ஜன் ஜிண்டால், ஜிஎம்.ராவோ உள்ளிட்ட பெரும் தொழிலதிபா்களுக்கு யெஸ் வங்கி கோடிக்கணக்கான பணத்தை கடனாக வழங்கியுள்ளது. இதனால்தான் இந்த வங்கி திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளது. எனவே, பாஜக ஆதரவு தொழிலதிபா்களுக்கு அந்த வங்கி வழங்கிய கடன்கள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT