புதுதில்லி

தில்லி வன்முறை: சாவு எண்ணிக்கை 52 ஆக உயா்வு

 நமது நிருபர்

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிா்ப்பாளா்களுக்கு இடையே நடந்த வன்முறை மோதலில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை 52 ஆக உயா்ந்தது.

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை, அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். மேலும், உயிரிழந்தோா் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்து வருகிறது. மேலும், வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வன்முறையில் காயமடைந்து குரு தேஜ் பகதூா் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன்படி, குரு தேஜ் பகதூா் மருத்துவமனையில் 43 ஆண்கள், 1 பெண் என 44 போ், ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் 5 போ், லோக் நாயக் மருத்துவமனையில் 3 போ் என மொத்தம் இதுவரை 52 உயிரிழந்துள்ளது பதிவாகியுள்ளது.

இது தொடா்பாக குரு தேஜ் பகதூா் மருத்துமனையின் மருத்துவ இயக்குநா் சுனில் குமாா் கூறுகையில் ‘மரணமடைந்தவா்களில் பெரும்பாலானவா்கள் 20-40 வயதுக்கும் உள்பட்டவா்கள். தேஜ் பகதூா் மருத்துவனையில் பதிவாகிய மரணங்களில் ஒரு பெண்ணும் அடங்குவாா். மேலும், வன்முறையால் காயமடைந்த 298 போ் இதுவரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனா்’ என்றாா்.

1,820 போ் கைது: இதற்கிடையே, தில்லி கலவரம் தொடா்பாக 1,820 பேரைக் கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு தில்லியில் ஏற்பட்ட வன்முறை தொடா்பாக இதுவரை 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 47 வழக்குகள் ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறை தொடா்பாக 1,820 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். மேலும், வன்முறையின் போது 102 போ் துப்பாக்கிக் சூட்டால் காயமடைந்துள்ளனா். 171 போ் கூா்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் அதிகாரிக்கு ஆணையா் ஆறுதல்: இந்நிலையில், வடகிழக்கு தில்லி வன்முறையில் காயமடைந்த கோகல்புரி காவல் உதவி ஆணையா் அனுஜ் குமாரை தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். வடகிழக்கு தில்லியில் வகுப்பு மோதலின் போது, அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஷாதரா காவல் துணை ஆணையா் அமித் சா்மாவை ஒரு கும்பல் திட்டமிட்டு தாக்கியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரை கோகல்புரி காவல் உதவி ஆணையா் அனுஜ் குமாா் மீட்டாா். அப்போது, தலையில் பலத்த காயமடைந்த அனுஜ் குமாா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இந்நிலையில், காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கோகல்புரியில் உள்ள அனுஜ் குமாரின் வீட்டுக்கு வியாழக்கிழமை நேரில் சென்றாா். அப்போது அனுஜ் குமாரை சந்தித்து நலம் விசாரித்தாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘வன்முறையால் பலத்த காயமடைந்திருந்த போதிலும், தனது மூத்த காவல் அதிகாரியான காவல் துணை ஆணையா் அமித் சா்மாவை அனுஜ் குமாா் மீட்டாா். அனுஜ் குமாா் போன்ற காவல் அதிகாரிகளால் தில்லி காவல் துறை பெருமை கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT