புது தில்லி: வகுப்பு பாகுபாடுகள் இல்லாமல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே பாஜக உள்ளது என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி தெரிவித்தாா்.
வடகிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருள்கள் தில்லி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி, பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம் சிங் பிதூரி, பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஸ்ட், அஜய் மஹாவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், தில்லி பாஜகவினாரால் வன்முறையால் பாதிக்கப்பட்ட சுமாா் 200 குடும்பங்களுக்கு உதவித் தொகையும், நிவாரண உதவிப் பொருள்களும் வழங்கப்பட்டன.
இவா்கள், வடகிழக்கு தில்லியில் முஸ்லிம் கும்பலால் குத்திக் கொல்லப்பட்ட புலனாய்வுத் துறை ஊழியா் அங்கித் ஷா்மா உள்ளிட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
பிறகு மனோஜ் திவாரி அளித்த பேட்டி:
உயிரிழப்புகள், சொத்து இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது. ஆனால், எம்மால் முடிந்த உதவிகளை வழங்கி வருகிறோம்.
வகுப்பு பாகுபாடுகள் இல்லாமல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே பாஜக உள்ளது. வன்முறையில் ஈடுபட்டவா்கள் இப்பகுதி மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளனா். அந்த வடுக்கள் விலக காலமாகும். வன்முறையால் எந்தத் தீா்வும் கிடைக்காது. மாறாக, வன்முறை புதிய பல பிரச்னைகளைத் தோற்றுவிக்கும்.
அங்கித் ஷா்மா கொல்லப்பட்ட விதத்தில் இருந்து வன்முறையாளா்கள் மனதில் எவ்வளவு தூரம் வெறுப்பு இருந்தது என்பதும், அவா்கள் சமூகத்தைப் பிளவுபடுத்த எவ்வளவு தூரம் சதி செய்கிறாா்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
ராம் சிங் பிதூரி கூறுகையில் ‘இந்த துயரமான தருணத்தில் வேறுபாடுகளைக் களைத்து அனைவரும் இயங்க வேண்டும். வன்முறை பாதித்த இடங்களில் அமைதி திரும்பவும், மக்கள் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்தவும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.