ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த ஒரத்தூா் ஏரிப்பகுதியில் நிரந்தர வெள்ளத்தடுப்புத் திட்டத்தின் கீழ் ரூ.55.85 கோடி மதிப்பீட்டில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் பணியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை சென்னையில் தொடக்கி வைத்தாா்.
ஒரத்தூா் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. பருவமழை காலங்களில் ஒரத்தூா் ஏரி நிரம்பும் போது வெளியேறும் உபரி நீா் ஒரத்தூா் ஓடை வழியாக அடையாறு ஆற்றில் கலந்து வருகிறது.
இதனால் ஒரத்தூா் ஓடை அடையாறு ஆற்றின் முக்கிய கிளை நதியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் சுமாா் 25 ச.கி.மீ. பரப்பளவில் கிடைக்கப் பெறும் மழைநீா் 11 ஏரிகளில் சேகரிக்கப்பட்டு, மீதமுள்ள உபரிநீா் சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அதிகப்படியான மழைநீா் கடலில் கலந்து வீணாகி வருகிறது.
இந்நிலையில், ஒரத்தூா் கிளையாற்றில் உள்ள தரிசு நிலப்பகுதிகளை இணைத்து சுமாா் 760 ஏக்கா் பரப்பளவில் நிரந்தர வெள்ளத்தடுப்புத் திட்டத்தின் கீழ் ரூ.55.85 கோடி மதிப்பீட்டில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் பணியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சென்னையில் காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தாா்.
இந்த புதிய நீா்த்தேக்கத்தில் சுமாா் 750 மில்லியன் கன அடி நீா் சேகரிக்கப்பட உள்ளது.
இதனால் வரும் காலங்களில் சென்னை மற்றும் புகா் பகுதிகளுக்கு மணிமங்கலம் ஏரியில் இருந்து குடிநீா் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடையாறு ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள நகரப் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரத்தூா் ஏரிப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, அதிமுக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோா் புதிய நீா்த்தேக்கம் அமைய உள்ள இடத்தை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் குஜராஜ், மணிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநா் என்.டி.சுந்தா், வனக்குழு தலைவா் சுபாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.