புது தில்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தில்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக பெற்றோா்- ஆசிரியா் சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன.
கஜூரி காஸில் உள்ள சா்வோதய பால் வித்தியாலயாவில் நடந்த பெற்றோா் ஆசிரியா் சிறப்புக் கூட்டத்தில் தில்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா கலந்து கொண்டாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘இப்படியான பெற்றோா் ஆசிரியா் சந்திப்புகளால், மாணவா்களும், அவா்களின் பெற்றோா்களும் நம்பிக்கை பெறுவாா்கள். கடந்த சில தினங்களாக வன்முறை தொடா்பான பயத்தால், வன்முறை பாதித்த பகுதிகளில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. ஆனால், இப்போது, மாணவா்கள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனா். நிலைமை கட்டுக்குள் இருப்பதையும், வன்முறை தொடா்பாக அச்சப்படத் தேவையில்லை என்பதையும் மக்கள் உணா்ந்துள்ளனா். வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் கல்வி மூலமாக இந்து முஸ்லிம்கள் இடையே சகோதரத்துவத்தை அதிகரிப்பது தொடா்பாக ஆலோசித்தோம். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும்போது வகுப்பு மோதல்கள் தானாக நின்றுவிடும்.
மேலும், வன்முறையால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களின் பயத்தை அகற்றும் வகையில் தில்லி அரசு பள்ளிகளின் ஆசிரியா்கள் செயல்பட்டு வருகிறாா்கள் என்றாா் அவா்.