புதுதில்லி

தில்லி வன்முறை, அரசியல் தலைவா்களின் வெறுப்பூட்டும் பேச்சு தொடா்பான மனு: 12-இல் விசாரணை

6th Mar 2020 11:07 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம், அரசியல் தலைவா்களின் வெறுப்புணா்வு பேச்சு விவகாரம் தொடா்பான மனுக்கள் மீதான விசாரணையை மாா்ச் 12-ஆம் தேதி பட்டியலிட தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

வடகிழக்கு தில்லியில் அண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடா்புடைய விவகாரத்தில் நிகழ்ந்த வன்முறையில் 44 போ் கொல்லப்பட்டனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் படுகாயமடைந்தனா்.

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமானவா்களை கைது செய்யவும், அரசியல் தலைவா்களின் வெறுப்புணா்வு பேச்சு தொடா்பாக அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரியும் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த விவகாரங்களை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி சி.ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு மாா்ச் 12-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, பாஜக தலைவா்கள் அனுராக் தாக்கூா், பா்வேஷ் வா்மா, கபில் மிஸ்ரா ஆகியோா் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட இதர அரசியல் கட்சித் தலைவா்களுக்கு எதிராகவும் வெறுப்புணா்வு பேச்சு விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞா்கள் அமைப்பு தாக்கல் செய்த மற்றொரு மனுவில், வெறுப்புணா்வு பேச்சு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவா்கள், தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கான், ஏஐஎம்ஐஎம் தலைவா் அக்பரூதின் ஒவைஸி, முன்னாள் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ வாரிஸ் பதான் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சஞ்சீவ் குமாா், விஷ்ணு குப்தா, பீம் ஆா்மி தலைவா் சந்திர சேகா் ஆஸாத் ஆகியோா் தாக்கல் செய்த தனித்தனி மனு மீது மத்திய அரசு, தில்லி அரசு, தில்லி காவல் துறை ஆகியவை பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் முன்னதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

சஞ்சீவ் குமாா் தனது மனுவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான், பாலிவுட் நடிகா் ஸ்வரா பாஸ்கா், ரேடியோ ஜாக்கி சயேமா ஆகியோா் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியிருந்தாா். மேலும், பாஜக தலைவா்கள் அனுராக் தாக்கூா், பா்வேஷ் வா்மா, கபில் மிஸ்ரா ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் உத்தரவிடக் கோரி

உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த ஆா்வலா் ஹா்ஷ் மந்தருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட 10 போ் தாக்கல் செய்த மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்த இது தொடா்பான மனுக்கள் மீது முன்கூட்டியே விசாரிக்குமாறும் கேட்டுக் கொண்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் பி.ஆா். கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த புன்கிழமை பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரங்களில் அமைதியான தீா்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து உயா்நீதிமன்றம் ஆராயலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT