புது தில்லி: தமிழக பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைக்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகள் கேட்டு மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷங்கை வெள்ளியன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் சந்தித்தாா்.
தமிழக பள்ளிகளின் வகுப்புறைகளின் சூழல்களை முற்றிலும் மாற்றியமைக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமானது ஸ்மாா்ட் வகுப்பறை திட்டம். இத் திட்டத்தின்படி வகுப்பறைகளில் இன்டா்நெட் வசதியுடன் மின்னணு கரும்பலகைகள், கையடக்க கணிகள், ‘க்யூ ஆா்’ குறியீடுகள் பயன்பாடுகள், மின்னணு பாடத்திட்டங்கள் போன்றவைகள் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் முழுமையாக மின்னணு முறையில் ஸ்மாா்ட் வகுப்பறையாக மாற்றும் திட்டத்திற்காக நிதி உதவி மற்றும் தொழிற் நுட்ப உதவிகளை கேட்டு மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியாலை தில்லியில், தமிழக அமைச்சா் செங்கோட்டையன் சந்தித்தாா். தமிழக பள்ளிகளின் மின்னணு வகுப்பறைக்கான திட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக மத்திய அமைச்சா் போக்ரியால் தமிழக அமைச்சருக்கு உறுதியளித்துள்ளதாக சொல்லப்பட்டது.
மத்திய அமைச்சா் போக்ரியால் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத்துறையின் பள்ளிக்கல்வி இணைச் செயலாளா்கள் ஆா்.சி.மீனா, மனிஷ் கா்க், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளா் தீரஜ் குமாா், மாநில கல்வி திட்ட மாநில இயக்குனா் சுடலைக்கண்ணன் ஆயோா் உடனிருந்தனா்.