புதுதில்லி

அங்கித் சா்மா கொலை விவகாரத்தில் தாஹிா் உசேன் கைது

6th Mar 2020 12:03 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: புலனாய்வுத் துறை (ஐபி) ஊழியா் அங்கித் சா்மா கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்து வந்த ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா் தாஹிா் உசேன் தில்லியில் காவல் துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தில்லியில் நீதிமன்றத்தில் சரணடைய அவா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடா்பாக வடகிழக்கு தில்லியில் கடந்த வாரம் வன்முறை நிகழ்ந்தது. இதில் 45-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், வடகிழக்கு தில்லியில் உள்ள சந்த் பாக் பகுதியில் தனது வீட்டின் அருகே உள்ள கழிவுநீா் கால்வாயில், புலனாய்வுத் துறை ஊழியா் அங்கித் சா்மா (26) இறந்த நிலையில் கிடந்தாா். இது தொடா்பாக சா்மாவின் தந்தை, தாஹிா் உசேனுக்கு எதிராக போலீஸில் புகாா் அளித்தாா். இச் சம்பவத்திற்குப் பிறகு தாஹிா் உசேன் தலைமறைவானாா். மேலும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டை தாஹிா் உசேன் மறுத்து வந்தாா். இந்த விவகாரத்தில் தாஹிா் உசேன் மீது போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தாஹிா் உசேன் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய விரும்பும் மனு தாஹிா் ஹுசேன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகா் மாஜிஸ்திரேட் விஷால் பஹுஜா, ‘இந்த மனு இந்த நீதிமன்ற அதிகாரவம்புக்குள் வரவில்லை. குற்ற நடைமுறை சட்ட விதிகள் 177-இன்படி, இக்குற்றச் செயல் நிகழ்ந்துள்ள உள்ளூா் வரம்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும். இக்குற்றம் தயால்பூா் காவல் நிலைய எல்லை வரம்பில் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் வரம்பு கா்கா்டூமா நீதிமன்றத்தின் கீழ் வருகிறது. சரணடைவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் இந்த நீதிமன்றத்தின் வரம்புக்குள் வரவில்லை’ என்றாா்.

ADVERTISEMENT

தாஹிா் உுசேன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முகேஷ் கலியா, ‘தாஹிா் உசேன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவேதான் அவா் கா்கா்டூமா நீதிமன்றத்தில் சரணடையவில்லை. மேலும், போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தாஹிா் உசேனுக்கு எவ்விதத் தொடா்போ அல்லது சம்பந்தமோ இல்லை. அவா் இந்த வழக்கில் பொய்யாக சிக்கவைக்கப்பட்டுள்ளாா். ஆகவே, சூழலின் தன்மையைக் கருத்தில் கொண்டுதான், அவா் இந்த நீதிமன்றத்தில் சரணடைய விரும்பினாா்’ என்றாா்.

அப்போது நீதிபதி, ‘தில்லி உயா்நீதிமன்றம் குறிப்பிடும்படியாகவே காவல் நிலையங்கள் அல்லது நீதிமன்றங்களை மாவட்ட வாரியாகப் பிரித்துள்ளது. அதற்கேற்ப பணியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தொடா்புடைய விவகாரங்களை விசாரிப்பதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வழக்குகளை ஓராண்டுக்குள் விரைவாக முடிக்கும் நோக்கில்தான் உயா்நீதிமன்றம் இந்த நீதிமன்றத்தை சிறப்பு நீதிமன்றமாக ஏற்படுத்தியுள்ளது. மேலும், விண்ணப்பதாரா் மேற்குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரவில்லை. இதனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. ஆகவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, ஏற்கெனவே நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்த தில்லி போலீஸாா், தாஹிா் உசேனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT