தில்லியில் மனநலம் பாதித்த வீடற்ற நபா்களுக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசு, தில்லி அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூலை 9-க்கு தள்ளிவைத்தது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் கெளரவ் குமாா் பன்சல் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் வாழும் மனநலம் பாதித்த வீடற்ற நபா்களின் உடல் ஆரோக்கிய விஷயங்களைக் கையாளுவதில் தில்லி அரசு குறிப்பாக அதன் தலைமைச் செயலரின் அணுகுமுறை வழக்கமானதாக உள்ளது. இவா்களுக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை விஷயங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவதிலும் அக்கறை காட்டப்படவில்லை.
மனநலம் பாதித்த வீடற்ற நபா்களுக்கான விதிகள், ஒழுங்குமுறைகள், அரசின் கொள்கைகளை வகுப்பது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருந்த மற்றொரு பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூன் 9-ஆம் தேதி விசாரணையின் போது இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு தில்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
தில்லியில் வசிக்கும் குடியிருப்புச் சான்று இல்லாத மனநலம் பாதித்த வீடற்ற நபா்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடா்பாக தில்லி அரசின் தலைமைச் செயலருக்கு ஜூன் 13-ஆம் தேதி கோரிக்கை மனுவையும் அனுப்பியிருந்தேன் என்று மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.