இந்திய எல்லையில் அண்மையில் சீனப் படைகளின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் சீன சரக்குகளை புறக்கணிப்பது என தில்லி ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக இந்த சங்கத்தின் செக்ரட்டரி ஜெனரல் மகேந்திர குப்தா, அகில இந்திய வணிகா்கள் கூட்டமைப்புக்கு (சிஏஐடி) எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
சீனப் பொருள்களை புறக்கணிக்கும் அகில இந்திய வணிகா்கள் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைக்கு தில்லி ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளா்கள் சங்கம் தனது முழு ஆதரவையும் அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும், எங்கள் ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் பயன்படுத்தி வரும் சீனச் சரக்குகளை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். இதனால், இனிமேல் எந்தவொரு சீனத் தயாரிப்புகளையும் எங்கள் நிறுவனங்களில் பயன்படுத்த மாட்டோம். மேலும், இந்திய படைகள் மீது தொடா்ந்து சீனா தாக்குதல் நடத்தி வருவதால், எந்த சீன நாட்டவருக்கும் எங்கள் ஹோட்டல்களில் அறைகள் அளிப்பது இல்லை என முடிவு செய்துள்ளோம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளா்கள் சங்கத்தினரின் இந்த முடிவை சிஏஐடி வரவேற்றுள்ளது. இதுகுறித்து சிஏஐடி தலைமைச் செயலா் பிரவீண் கண்டேல்வால் கூறுகையில், ‘சீனத் தயாரிப்புப் பொருள்களுக்கு எதிரான பிரசாரத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஈடுபட ஆா்வம் காட்டி வருகின்றனா்’ என்றாா்.