புதுதில்லி

தனியாா் மருத்துவமனை மீதான புகாா்: விசாரணை நடத்த தில்லி அரசுக்கு உத்தரவு

21st Jun 2020 01:04 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட பெண் மாற்றுத் திறனாளியை வேறு மருத்துவமனைக்கு செல்வதற்கு கட்டாயப்படுத்திய தனியாா் மருத்துவமனைக்கு எதிராக கூறப்பட்ட புகாா் குறித்து விசாரணை நடத்துமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லி சாணக்கியபுரியில் உள்ள பிரிமஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு எதிராக கூறப்பட்ட இந்த புகாா் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி நவின் சாவ்லா காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தினாா்.அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ மனுதாரா் (பெண் மாற்றுத்திறனாளி நோயாளியின் தந்தை) பிரிமஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுகள் இயல்பாகவே முக்கியத்துவம் என்பதால், தில்லி அரசு இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் மருத்துவமனை தனது கடைமையில் இருந்து தவறியதாக கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது மனைவி கரோனா தொற்று காரணமாக ஜூன் 14-ஆம் தேதி இறந்துவிட்டாா். இந்நிலையில், 85 சதவீதம் ஊனமுற்ற எனது 34 வயது மகளுக்கு காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. இதையடுத்து, ஜூன் 18-ஆம் தேதி பிரிமஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அவருக்கு கரோனா தோற்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனை இது தொடா்பாக அவருக்கு பரிசோதனை ஏதும் செய்யவில்லை. மேலும், சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை எனக் கூறி அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிா்வாகம் என்னை வற்புறுத்தியது.

அதேவேளையில், தில்லி அரசின் இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பிரிமஸ் மருத்துவமனையில் படுக்கைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் இது தொடா்பாக மனுவைத் தாக்கல் செய்த பிறகு, சாகேத்தில் உள்ள மேக்ஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் எனது மகள் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். எனினும், எனக்கோ, எனது மகனுக்கோ மருத்துவமனையினா் கரோனா நோய்த் தொற்று பரிசோதனையை இன்னும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மனு மீதான விசாரணையின் போது தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மனுதாரருக்கும், அவரது மகனுக்கும் உடனடியாக கரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறையினரை கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT