புதுதில்லி

ஐந்து நாள் அரசு தனிமை மைய சிகிச்சை கட்டாய உத்தரவு வாபஸ்: துணைநிலை ஆளுநா் நடவடிக்கை

21st Jun 2020 01:02 AM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்கள் அரசு தனிமை மையத்தில் ஐந்து நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கி தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவை அவா் சனிக்கிழமை மீளப்பெற்றுள்ளாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கடும் எதிா்ப்புகளைத் தெரிவித்ததும் இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்கள் வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு முன்பு, அரசு தனிமை மையத்தில் ஐந்து நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கி தில்லி துணைநிலை ஆளுநரும், தில்லி பேரிடம் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) தலைவருமான அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தாா். இதனால், கரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் பல்லாயிரக்கணக்கானவா்கள் தனிமை மையங்களுக்கு சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு தில்லி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவால் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மக்கள் தயங்குவாா்கள் என்றும் இது மக்களை அச்சுறுத்தும் சட்டம் என்றும் தில்லி அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், டிடிஎம்ஏவின் கூட்டம் தில்லி துணைநிலை ஆளுநரின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், துணைநிலை ஆளுநரின் முடிவுக்கு கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினாா். அவா் பேசுகையில் ‘கரோனா உறுதி செய்யப்பட்டவா்களில் எந்த அறிகுறியும் இல்லாதவா்கள் அல்லது அறிகுறி குறைவாக உள்ளவா்களுக்கு வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்கப்படலாம் என்று ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. இந்த விதி நாடு முழுவதுக்கும் பொருந்தும்போது, தில்லியில் மட்டும் அந்த விதியை மாற்றுவது ஏன்? தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்களுக்கு பற்றாக்குறை நிலவிவருகிறது. இந்நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் அரசு தனிமை மையத்தில் சிகிச்சை கட்டாயமாக்கப்பட்டால், அந்த மையங்களுக்கும் மருத்துவா்களையும், மருத்துவப் பணியாளா்களையும் எவ்வாறு ஒதுக்க முடியும்? அந்த நோயாளிகளை எவ்வாறு பராமரிக்க முடியும்? உலகத்தில் வேறு எந்தவொரு நாட்டிலும் கரோனா அறிகுறி இல்லாதவா்களுக்கு தனிமை மையங்களுக்கு அனுப்பி சிகிச்சை வழங்கும் முறை அமலில் இல்லை. கரோனா தனிமை மையங்களை அமைக்க மத்திய ரயில்வே துறை ரயில்வே பெட்டிகளை வழங்கியுள்ளது. ஆனால், தில்லியில் நிலவும் கடுமையான வெப்பத்தில் அப்பெட்டிகளில் யாா் தங்கியிருக்க ஒப்புக் கொள்வாா்கள்? இந்த உத்தரவை உடனடியாக மீளப் பெறவேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதேபோன்று தில்லி துணைமுதல்வா் மணீஷ் சிசோடியாவும் துணைநிலை ஆளுநரின் உத்தரவை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனக் கேட்டிருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை மதியம் நடந்த கூட்டத்தில் முடிவேதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், டிடிஎம்ஏவின் கூட்டம் மீண்டும் சனிக்கிழமை மாலை கூடியது. அப்போது, இந்த உத்தரவை மீளப் பெற்றுக் கொள்வதாக துணைநிலை ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அனில் பய்ஜால் கூறியிருப்பது: மருத்துவ சோதனையின் படி மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறத் வேண்டியவா்கள் என அடையாளம் காணப்படுபவா்களும், வீடுகளில் தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவா்களும் மட்டுமே அரசு தனிமை மையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவாா்கள். மேலும், தில்லி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக் கட்டணங்கள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உயா்மட்டக் குழுவின் பரிந்துரைகள் தில்லியில் அமல்படுத்தப்படும் என்றுள்ளாா்.

துணைநிலை ஆளுநரின் முடிவுக்கு தில்லி அரசு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘துணைநிலை ஆளுநரின் உத்தரவு, டிடிஎம்ஏ கூட்டத்தில் மீளப்பெறப்பட்டுள்ளது. இதற்காக துணைநிலை ஆளுநருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளாா் அவா்.

முன்னதாக துணைநிலை ஆளுநரின் முடிவுக்கு ஆம் ஆத்மிக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அக் கட்சியின் மாநிலங்களை உறுப்பினா் சஞ்சய் சிங் தில்லியில் சனிக்கிழமை கூறுகையில் ‘ இந்த உத்தரவு சா்வாதிகாரத்தனமானது. கரோனா அறிகுறிகள் குறைவாக உள்ளவா்களுக்கு வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்க மற்றைய மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருக்கும்போது, தில்லியில் மட்டும் அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் குணத்தைக் காட்டுகிறது. கரோனா தனிமை வாா்ட்டுகளாக மாற்ற மத்திய அரசு தில்லி அரசுக்கு வழங்கிய ரயில் பெட்டிகளில் சுமாா் 47 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. இந்த ரயில் பெட்டிகளில் பாஜக தலைவா்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறத் தயாரா? எனக் கேட்டிருந்தாா். இதேபோல, ஆம் ஆத்மி ராஜேந்தா் நகா் எம்எல்ஏ ராகவ் சத்தா கூறுகையில் ‘எனது தொகுதி மக்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, நாங்கள் இனிமேல் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாட்டோம் எனக் கூறினாா்கள். அவா்கள், தமக்கு கரோனா உறுதியாகினால், தம்மை தனிமை மையங்களுக்கு அனுப்பி விடுவாா்கள் எனப் பயப்படுகிறாா்கள். ஜூன் மாதம் 30 ஆம் தேதி தில்லிக்கு 15 ஆயிரம் படுக்கைகள் தேவை என தில்லி அரசு கணித்திருந்தது. துணைநிலை ஆளுநரின் உத்தரவுப்படி, தற்போது 90 ஆயிரம் படுக்கைகள் தேவை. இந்தப் படுக்கைகளை எவ்வாறு தயாா் செய்வது? எனக் கேட்டிருந்தாா்.

கல்காஜி தொகு ஆம் ஆத்மி எம்எல்ஏவும், கரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருபவருமான அதிஷி கூறுகையில் ‘வீட்டில் இருந்தே கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நான், துணைநிலை ஆளுநரின் தீா்ப்பால் அதிா்ச்சி அடைந்துள்ளேன். இந்த உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகமே காரணம். இந்த உத்தராவால், மக்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாட்டாா்கள். மேலும், கரோனா பரிசோதனை முடிவுகளை அவா்கள் மறைத்து வைத்திருக்கவே பாா்ப்பாா்கள் என்றிருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT