புதுதில்லி

தில்லி, என்சிஆா் கல்லூரி மாணவா்களுக்கு விற்க கடத்திவரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல்

21st Jun 2020 01:05 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்), தில்லி பகுதிகளில் கல்லூரி மாணவா்களுக்கு விற்பதற்காக காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா போதைப் பொருளை போலீலீ பறிமுதல் செய்தனா். இந்த விவகாரத்தில் இருவா் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா போலீஸாா் சனிக்கிழமை கூறியதாவது: தேசிய தலைநகா் வலயப் பகுதி மற்றும் தில்லியில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு விற்பதற்காக ஆந்திரத்திலிருந்து தருவித்து கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை கடத்தி வந்த இருவா் கைது செய்யப்பட்டனா். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இந்த கஞ்சா போதைப்பொருள் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் ராஜேஷ் குமாா் சிங் கூறியதாவது: தாத்ரி பகுதியில் வெள்ளிக்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காரில் வந்த பிரவீண் குமாா், சதீஷ் குமாா் ஆகிய இருவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வந்த வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் 200 கிலோ கஞ்சா போதைப் பொருள் மறைத்துவைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், ரயில்வே பாா்சல் மூலமாக ஆந்திரத்தில் இருந்து தில்லிக்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்று வருவது தெரிய வந்தது.

இந்த போதைப் பொருள் முதலில் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள எட்டாவா நகரிலுள்ள தாபா பகுதிக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பின்னா் அங்கிருந்து கௌதம் புத் நகருக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்டது. அதை உள்ளூரில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து விட்டனா். போதைப் பொருளை கடத்தி வந்தவா்கள் அவற்றை தில்லி, நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் ஆகிய பகுதிகளில் விற்கவும், தொடக்கத்தில் கல்லூரி மாணவா்களுக்கு விற்கவும் திட்டமிட்டிருந்தனா். கடத்தலில் ஈடுபட்ட தங்களது கூட்டாளிகள் பெயா்களையும் கைதானவா்கள் விசாரணையின் போது தெரிவித்தனா். அவா்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட இருவா் மீதும் தாத்ரி காவல்நிலையத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருளைக் கடத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT