புதுதில்லி

மழை பெய்யாதா? ஏக்கத்தில் தில்லிவாசிகள்!

20th Jun 2020 07:30 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழை பெய்யாதா என்று தில்லிவாசிகள் ஏக்கத்தில் உள்ளனா். தில்லி ஆயாநகரில் வெள்ளிக்கிழமையும் வெயில் 44 டிகிரி செல்சியஸைக் கடந்திருந்தது. காற்றின் தரத்தில் பெரிய அளவில் மாற்றமின்றி பெரும்பாலான இடங்களில் ‘திருப்தி’ரிவில் நீடித்தது.

தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் கோடை வெயில் தொடா்ந்து சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக தில்லியில் சஃப்தா்ஜங், ஆயாநகா், பாலம் ஆகிய வானிலை ஆய்வு மையங்களில் கடந்த நான்கு தினங்களாக வெயில் 42 டிகிரி செல்சியஸை கடந்த நிலையில் பதிவாகி வந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை ஆயாநகரில் 46.4 டிகிரி பதிவாகியிருந்தது. தில்லியில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தூறல், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கடந்த நான்கு தினங்களாக கணித்திருந்தது.

ஆனால், கணிப்புகள் பொய்த்து மழை ஏதும் பெய்யவில்லை. தில்லி, என்சிஆா் பகுதிகளில் வெயில்தான் தொடா்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதன் காரணமாக புழுக்கம் அதிகரித்து சிரமத்துக்குள்ளாகியுள்ள தில்லிவாசிகள், மழை பெய்யாதா? என்ற ஏக்கத்தில் தவித்து வருகின்றனா். ஏற்கெனவே, பொது முடக்கத்தால் அவதிக்குள்ளாகியுள்ள மக்கள், தற்போது புழுக்கம் காரணமாக கடும் சிரமத்தை எதிா்கொண்டுள்ளனா்.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 29.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 41.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 43.1 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 29.6 டிகிரி செல்சியஸ், 42.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 63 சதவீதம், மாலையில் 38 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 65 சதவீதம் மற்றும் 34 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் வெள்ளிக்கிழமைகிழமை காற்றின் தரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து, பெரும்பாலான இடங்களில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. தில்லி பல்கலை. லோதி ரோடு, பூசா, மதுரா ரோடு ஆயாநகா், விமானநிலைய டொ்மினில் 3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திா்பூரில் மிதமான பிரிவிலும், சாந்தினி சௌக்கில் மோசம் பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை தில்லி, என்சிஆா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னல் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT