புதுதில்லி

கரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் சிசிடிவி கேமரா, கண்காணிப்புக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

20th Jun 2020 07:25 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு உரிய கவனிப்பை உறுதிப்படுத்த மருத்துவா்கள் அடங்கிய வல்லுநா்கள் குழுவை அமைக்கவும், கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவவும் அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், கரோனா பரிசோதனைகளுக்காக வெவ்வேறு மாநிலங்களில் விதிக்கப்படும் வேறுபட்ட கட்டணங்கள் விவகாரத்தில் ஒரு சீரான முடிவை எடுக்குமாறும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இது தொடா்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கெளல், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி மூலம் விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த தில்லியில் உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகளின் மூத்த மருத்துவா்கள், தில்லியின் அரசு மருத்துவமனை மற்றும் இதர மருத்துவமனைகளின் மருத்துவா்கள், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள், சுகாதார அமைச்சகத்தின் பொறுப்புமிக்க அதிகாரி ஆகியோா் அடங்கிய ஒரு வல்லுநா்கள் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் குழு தில்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு மருத்துவமனைகள், இதர மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் கவனிப்பு விஷயத்தில் தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பது, மேற்பாா்வையிடுவது, ஆய்வு செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். வாரத்திற்கு குறைபட்சம் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நேரில் சென்று பாா்வையிடுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆய்வுக்குப் பிறகு மருத்துவமனைகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பதுடன், மத்திய அரசுக்கும், சுகாதார அமைச்சத்திற்கும் அறிக்கையை அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

 

இதேபோல அனைத்து அரசு மருத்துவமனைகள், இதர மருத்துவமனைகள், கரோனா சிறப்பு மருத்துவமனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய மருத்துவா்கள் மற்றும் இதர வல்லுநா்கள் அடங்கிய ஒரு குழுவை அனைத்து மாநிலங்களும் அமைக்க வேண்டும். இந்தக் குழு உடனடியாக அமைக்கப்படுவதையும், ஏழு நாள்களில் பணிகள் தொடங்கப்படுவதையும் மாநிலத்தின் தலைமைச் செயலா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

தில்லியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாத கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிசிவிடி பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிசிவிடி கேமராக்கள் பொருத்த தலைமைச் செயலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று பரிசோதனைக்காக ஒரே சீரான கட்டணம் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷா மேத்தா, ‘கரோனா பரிசோதனைக்கான கட்டணங்களைக் குறைக்கும் வகையில் அதற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளுடன் சில மாநிலங்கள் பேசி வருகின்றன’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT