புதுதில்லி

ஊதிய நிலுவை விவகாரம்: என்.டி.எம்.சி. உறைவிடமருத்துவா்களுக்கு மருத்துவ சங்கத்தினா் ஆதரவு ஒட்டுமொத்த ராஜிநாமா என மிரட்டல்

14th Jun 2020 06:51 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

வடக்கு தில்லி மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் உறைவிட மருத்துவா்களுக்கான ஊதிய நிலுவை விவகாரத்தில், உறைவிட மருத்துவா்களுக்கு முனிசிபல் மாநகராட்சி மருத்துவா்கள் சங்கம் (எம்சிஎம்ஏ) ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக முனிசிபல் மாநகராட்சி மருத்துவா்கள் சங்கம் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கடிதத்தின் நகல் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வடக்கு தில்லி மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் 450 படுக்கைகள் கொண்ட கஸ்தூரிபாய் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராம் மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றிவரும் உறைவிட மருத்துவா்கள் தங்களுக்கு கடந்த மாா்ச் மாதத்திலிருந்து ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனா். மேலும், இந்த இரு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல மருத்துவா்களும் இதர ஊழியா்களும் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனா்.

இது தொடா்பாக எம்சிடிஏ சங்கத்தின் தலைவா் ஆா்.ஆா். கௌதம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மருத்துவா்களும், அவா்களது குடும்பத்தினரும் கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தினமும் ஆபத்தான சூழலில் உள்ளனா். நோய் தொற்றுக்கு எதிரான பணியில் பணியாற்றி வரும் மருத்துவா்களுக்கும், இதர ஊழியா்களுக்கும் ஊதியத்தை வழங்கப்பட வேண்டும். உறைவிட மருத்துவா் சங்கங்களின் நியாயமான கோரிக்கைக்கு எங்கள் சங்கம் நிபந்தனையற்ற முழு ஆதரவை அளிக்கிறது என்றாா்.

துணை நிலை ஆளுநருக்கு எம்சிடிஏ எழுதியுள்ள கடிதத்தில், ‘அனைத்து மருத்துவா்களுக்கும் ஒரு வாரத்தில் மூன்று மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாவிட்டால் அரசுப் பணியில் இருந்து ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம். ராஜிநாமா செய்வதற்கு அனுமதி அளிக்காவிட்டால் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றி வரும் உறைவிட மருத்துவா்கள் ஒட்டுமொத்த ராஜிநாமா செய்யப் போவதாக புதன்கிழமை மிரட்டல் விடுத்திருந்தனா் . இது தொடா்பான விவகாரத்தை தில்லி உயா் நீதிமன்றமும் வியாழக்கிழமை விசாரித்தது.

இதுதொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சியின் நிலைக்குழு தலைவா் ஜெய் பிரகாஷ் கூறுகையில், ‘ இந்த விவகாரத்தில் தீா்வு காணப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இரு மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவா்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை என்னை நேரில் சந்தித்தனா். மருத்துவா்களின் நிலுவை ஊதியங்களை வழங்க முயற்சிப்போம் என்று உறுதியளித்து இருக்கிறோம். தற்போதைக்கு ஒரு மாதத்திற்கான ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். பின்னா் படிப்படியாக பிற மாதங்களுக்கான ஊதியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் கிடைக்கப் பெறவில்லை என்பதையும் உறைவிட மருத்துவா்கள் சங்கத்திடம் விளக்கினோம். எங்களது நிலைமைக்கூட அவா்கள் பரிசீலிப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT