புதுதில்லி

உ.பி., ஹரியாணாவைவிட தில்லியில் அதிக கரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன: சத்யேந்தா் ஜெயின்

14th Jun 2020 07:01 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பாஜக ஆளும் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகியவற்றை விட தில்லியில் பத்து மடங்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் குறைந்தளவு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவா் இதனைத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் அதிகளவு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாலேயே அதிகளவு கரோனா நோயாளிகள் இனம் காணப்படுகிறாா்கள். பாஜக ஆளும் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் குறைந்தளவு கரோனா பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இதனால்அம்மாநிலங்களில் குறைந்தளவு கரோனா நோயாளிகளே இனம் காணப்பட்டுள்ளனா்.

தில்லியில் கரோனாவை எதிா்கொள்ளும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். ஜூன் 30 ஆம் தேதிக்கு தேவையான வென்டிலேட்டா்கள் ஜூன் 20 ஆம் தேதியே தயாராகிவிடும். ஜூலை 15 ஆம் தேதிக்கு தேவையான ஏற்பாடுகள் ஜூன் 30 ஆம் தேதியே தயாராகிவிடும்.

ADVERTISEMENT

தில்லியில் உள்ள விளையாட்டரங்கங்கள், அரங்குகள், சமூக கூடங்கள், பள்ளிகள் ஆகியன கரோனா கோ் சென்டா்களாக மாற்றும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இங்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், கரோனா சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகள் வசூலித்துவரும் கட்டணம் தொடா்பாக தில்லி அரசுக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளோம். இதை அடிப்படையாக வைத்து கரோனா சிகிச்சைக்காக தில்லி தனியாா் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் தொடா்பாக முடிவு செய்வோம். 1918 இல் பரவிய ஸ்பானிஷ் ப்ளூவுக்கு இணையாக கரோனா பரவல் மனித குலத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. மேலும், கரோனா நோயாளிகளை எல்என்ஜேபி மருத்துவமனை தவறாக நடத்தியதாக வெளிவரும் தகவல்கள் உள்நோக்கம் கொண்டவை என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT