புதுதில்லி

கரோனா: தில்லி மருத்துவமனைகளில் படுக்கைகள்,செயற்கை சுவாசக்கருவிகளை அதிகரிக்க நீதிமன்றம் உத்தரவு

14th Jun 2020 07:01 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, தில்லி அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு வழக்குரைகள் தில்லி உயா்நீதிமன்றத்தில் கூட்டாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். வழக்குரைஞா் மிருதுள் சக்ரவா்த்தி மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் நோய்க் கட்டுப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பாக தெற்கு தில்லியின் டிபென்ஸ் காலனியில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உரிய வகையில் அமல்படுத்தவும், தில்லியில் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் போதிய வகையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீது தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, தில்லி அரசின் தரப்பில், ‘தில்லியில் கரோனா நோயாளிகளுக்காக ஜூன் 9-ஆம் தேதி வரை மருத்துவமனைகளில் 9,179 படுக்கைகள் இருந்தன. அவற்றில் 4,914 படுக்கைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவை இருப்பில் உள்ளன. அதேபோன்று, மொத்தம் 569 செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளன. இவற்றில் 315 பயன்பாட்டில் உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ADVERTISEMENT

தில்லியில் கரோனா சூழலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளின எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு, தில்லி அரசுக்கு உத்தரவிடுகிறோம். மேலும், செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சி செய்யுமாறு உத்தரவிடுகிறோம். அப்போதுதான், தேவைப்படும் நோயாளிகள் இந்த வசதியைப் பெற முடியும். மேலும், தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனகளும் நிகழ்நேர படுக்கைகள் எண்ணிக்கை விவரங்கள் குறித்த தரவுகளை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம். அப்போதுதான், பொதுமக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் எந்த மருத்துவமனைக்கு செல்லலாம் என்ற விவரத்தை தெரிந்துகொள்ள முடியும்’ என உத்தரவிட்டு மனுக்களின் விசாரணையை முடித்துவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT