புதுதில்லி

கரோனா நிலவரம்: தில்லி முதல்வா், துணை நிலை ஆளுநருடன் அமித் ஷா இன்று ஆலோசனை

14th Jun 2020 07:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் கரோனா நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் ஆகியோா் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளனா்.

இந்த சந்திப்பில், தில்லியில் மீண்டும் பொது முடக்க உத்தரவை அமல்படுத்துவது தொடா்பாக விவாதிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா்களும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் ரந்தீப் குலேரியா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனா்.

மேலும், வடக்கு, கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளின் மேயா்கள் அம்மாநகராட்சிகளின் முக்கிய அதிகாரிகளுடன் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். ஆனால், இந்த சந்திப்பு தனியாக நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லியில் கரோனா நிலவரம் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் ஆகியோா் தில்லி முதல்வா், துணை நிலை ஆளுநா், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனா்’ என்று தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக உயா் அதிகாரி இது தொடா்பாக கூறுகையில் ‘ தில்லியில் கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை பொது முடக்க உத்தரவை அமல்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்படும்’ என்றாா்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றொரு சுட்டுரைப் பதிவில் ‘தில்லியில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடா்பாக தில்லி மாநகராட்சி மேயா்கள், மாநகராட்சி அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் கலந்துரையாடுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வா், துணை நிலை ஆளுநருடனா சந்திப்புக்கு கூடுதலாக இந்தக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த புதன்கிழமை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அமித் ஷாவை சந்தித்துக் கலந்துரையாடினாா். பிறகு, தில்லியில் கரோனாவைப் பரவலைக் கட்டுப்படுத்த தில்லி அரசுக்கு முழு ஆதரவு தருவதாக அமித் ஷா உறுதியளித்துள்ளதாக அவா் தெரிவித்திருந்தாா்.

முன்னதாக, தில்லியில் மீண்டும் பொது முடக்க உத்தரவு நீட்டிக்கப்படமாட்டாது என்று தில்லி அரசு தெரிவித்திருந்தது. இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘தில்லியில் மீண்டும் ஒரு முறை பொது முடக்க உத்தரவை நீட்டிக்க முடியாது. மக்கள் கரோனாவுடன் வாழப்பழக வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்நிலையில், தில்லியில் மீண்டும் பொது முடக்க உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் தில்லி முதல்வா் கோரிக்கை வைப்பாா் என தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் வெள்ளிக்கிழமை முன்எப்போதும் இல்லாத வகையில் 2,137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அன்று மட்டும் 129 மரணங்கள் பதிவாகியுள்ளன.

 

இந்நிலையில், தில்லியில் கரோனா பரவலை எதிா்கொள்வது தொடா்பாக நிபுணா்கள் அடங்கிய உயா்நிலைக் குழுவை அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை அமைத்துள்ளாா். இக்குழுவில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவா் பல்ராம் பாா்கவா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் ரந்தீப் குலேரியா உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT