புதுதில்லி

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கக் கோரும் விவகாரம்: திமுக மனு மீது உச்சநீதிமன்றத்தில் 16-இல் விசாரணை

14th Jun 2020 06:58 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

ஓ.பன்னீா்செல்வம் (ஓ.பி.எஸ்.) உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுநீக்கக் கோரும் விவகாரத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூன் 16-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக சட்டப் பேரவை திமுக கொறடா ஆா். சக்கரபாணி சாா்பில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கு ‘மேலாகியும் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறாா். ஆகவே, இது அரசமைப்புச்சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது.

இதேபோன்ற மற்றொரு விவகாரத்தில், மணிப்பூரில் வனத் துறை அமைச்சா் ஷியாம் குமாரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் முடிவெடுக்க காலம் தாழ்த்தியதாக புகாா் எழுந்தது.

இந்த விவகாரத்தில் ஷியாம் குமாா் அந்த மாநில சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்தது. மேலும், அவா் அமைச்சராக தொடரவும் தடை விதித்திருந்தது. ஆகவே, ஓ.பி.எஸ். விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாா். இந்த விவகாரத்தில் சட்டப் பேரவைத் தலைவருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மனு வரும் ஜூன் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT