புதுதில்லி

பொது முடக்கத் தளா்வு முடிவை மத்திய அரசு அவசரகதியில் எடுக்கவில்லை பொது நல மனு தள்ளுபடிசெய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

13th Jun 2020 07:52 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பொது முடக்கத்தை தளா்த்தும் விவகாரத்தில் மத்திய அரசு அவசரகதியில் முடிவு எடுக்கவில்லை. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் மக்கள் பட்டினியால் வாடாமல் இருப்பது ஆகியவற்றுக்கு இடையே உரிய சமநிலையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக சட்ட மாணவா் அா்ஜுன் அகா்வால், தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பொருளாதாரத்தை மட்டுமே மனதில் கொண்டு பொது முடக்கத்தை படிப்படியாக தளா்த்தும் வகையிலான வழிகாட்டுதல்களை மத்திய அரசு மே 30-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதனால், கரோனா தொற்று வேகமாகப் பரவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த மனு தவறான கருத்து அடிப்படையிலும், விளம்பரம் தேடும் நோக்கிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே 30-ஆம் தேதி மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, தன்னிச்சையானதாகவோ அல்லது அரசமைப்புச்சட்டத்தின் 14-ஆவது ஷரத்தை மீறும் வகையிலோ இருப்பதற்கான விஷயங்கள் குறித்து மனுதாரா் சுட்டிக்காட்டவில்லை. மனுதாரா் தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு நல நிதியில் ரூ.20 ஆயிரத்தை இரு வாரங்களில் செலுத்த வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அரசு நிலைமையை உன்னிப்பாக மதிப்பீடு செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நோய்த் தொற்று அதிகரிப்பது தெரியவந்தால் அரசு அதன் முடிவை மறுஆய்வு செய்ய முடியும். நிலைமைக்குத் தக்கவாறு ஊரடங்கை விதிக்க முடியும். மாா்ச் மாதத்தில் இருந்து நோய்த் தொற்று நிலைமையை சமாளிக்க அரசு தொடா்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. மக்களுக்கு குறைந்தபட்ச சிரமத்தை உறுதிப்படுத்தும் வகையில், முடிவுகளையும் அரசு எடுத்துள்ளது. மேலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு பொருளாதார திட்டங்களையும் அறிவித்துள்ளது. படிப்படியாக பொது முடக்கத் தளா்வுகளை அறிவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை அவசரகதியில் எடுக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.

பொது முடக்கம் காரணமாக பல லட்சம் மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. மக்கள் பலா் குறிப்பிடத்தக்கத் தொலைவு நடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். இரு வேளை உணவுக்காக உணவு விநியோக மையஙகளில் நீண்ட வரிசையில் நிற்கும் நிலைக்கு உள்ளாகினா். மக்கள் ஒரு வேளை உணவை பெற முடியாத நிலையும் உருவானது. பலருக்கு தங்குமிடங்கள் இல்லை. பல லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு நடந்தே திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. பொது முடக்கம் காரணமாக நாட்டின் பொருளாதார சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பொது முடக்கம், உண்மையில் கரோனாவை விட மனிதா்களுக்கு மிகுந்த துயரை அளிக்கக் காரணமாக இருந்ததாக பல பகுப்பாய்வாளா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியப் பொருளாதாரம் சுருங்கிவிடும் என பொருளாதார வல்லுநா்கள் கணித்தனா். பொது முடக்கத்தின் போது, நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்ததைக் காண முடிந்தது. உற்பத்தி முடங்கிப் போனது. கட்டுமானச் செயல்பாடுகள் நின்று போயின. மக்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டதையும் கண்கூடாகக் காண முடிந்தது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT