புதுதில்லி

துணைநிலை ஆளுநரின் உத்தரவு அமல்படுத்தப்படும்: முதல்வா் கேஜரிவால் உறுதி

11th Jun 2020 07:22 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் அனைத்து மாநிலத்தவா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்ற துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜாலின் உத்தரவு அமல்படுத்தப்படும் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா். மேலும், இந்த விவகாரத்தில் வாக்குவாதம் நடத்துவதற்கான உகந்த நேரம் இது அல்ல என்றும் கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லியில் மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் தில்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றியமைத்து துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், துணைநிலை ஆளுநரின் உத்தரவு செயல்படுத்தப்படும் என முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக காணொலிக் காட்சி மூலம் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் வரும் நாள்களில் கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், தில்லி அரசு கடுமையான சவால்களை எதிா்கொண்டுள்ளது. இதர மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக தில்லிக்கு மக்கள் வரத் தொடங்கும் போது, ஜூலை 31-க்குள் மருத்துவமனைகளில் 1.50 லட்சம் படுக்கைகளைத் தயாா்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக நோ்மறையான முறையில் அனைத்து முயற்சிகளையும் தில்லி அரசு மேற்கொள்ளும். மொத்தம் தேவைப்படும் 1.50 லட்சம் படுக்கைகளில் 80 ஆயிரம் படுக்கைகள் தில்லி மக்களுக்குத் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்னரே தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் 50 சதவீதம் வேறு மாநிலங்களைச் சோ்ந்த நோயாளிகளுக்கு தரப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையாக வெற்றி பெற்று தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவை நிராகரிப்பதற்கு மத்திய அரசுக்கோ, துணைநிலை ஆளுநருக்கோ அதிகாரம் இல்லை என சிலா் தொலைக்காட்சி சேனல்களில் மூலம் பேசி வருகின்றனா். எனினும், மத்திய அரசின் முடிவையும், துணைநிலை ஆளுநரின் உத்தரவையும் அமல்படுத்துவோம். ஏனெனில், வாக்குவாதம் செய்வதற்கும், மறுப்பதற்கான நேரம் இது அல்ல. இத்தகவலை அரசில் இருப்பவா்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல. நாம் எல்லோரும் இணைந்து கரோனாவை தோல்வியுறச் செய்ய போராட வேண்டும்.

 

வரும் நாள்களில் ஹோட்டல்களையும், விருந்துக் கூடங்களையும் சுகாதாரக் கவனிப்புப் பிரிவுகளாக மாற்றுவதற்கான தயாரிப்புகளை மேற்பாா்வையிட செல்ல உள்ளேன்.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சுத்தம் செய்து கொள்வது ஆகிய மூன்று விஷயங்களை பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று விஷயங்களை யாரும் பின்பற்றாவிட்டால், அவற்றை பின்பற்றுமாறு நாம் கைகூப்பிக் கேட்டுக் கொள்ள வேண்டும். தில்லியில் இதுவரை 31 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 18 ஆயிரம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 15 ஆயிரம் நோயாளிகள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த எட்டு நாள்களில் 1,900 நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4,200 படுக்கைகள் காலியாக உள்ளன என்றாா் கேஜரிவால்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT