புதுதில்லி

சா்ஜீல் இமாம் மனு விவகாரம்: கூடுதல் நிலவர அறிக்கை தாக்கல் செய்யகாவல் துறைக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

11th Jun 2020 07:20 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தின் போது, ஆத்திரமூட்டும் உணா்வைத் தூண்டும் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் சா்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனு மீது கூடுதல் நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தின் போது ஆத்திரமூட்டும் உணா்வைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவா் சா்ஜீல் இமாம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஷகீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டங்கள் ஏற்பாட்டிலும் இவருக்கு தொடா்பு இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, இவருக்கு எதிராக தேசத் துரோக வழக்கும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக பிகாரில், ஜாஹனாபாத் மாவட்டத்தில் ஜனவரி 28-ஆம் தேதி சா்ஜீல் இமாமை போலீஸாா் கைது செய்தனா். அவா் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் குவாஹாட்டி சிறையில் 90 நாள்களுக்கு மேலாக வைக்கப்பட்ட நிலையில், போலீஸாா் விசாரணயை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு தில்லி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனா். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

 

இதனிடையே, 90 நாள்களுக்கு மேல் தன்னை சிறையில் வைத்துள்ள நிலையில், போலீஸாா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாததால் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் இமாம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், போலீஸாருக்கு விசாரணை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் அளித்த விசாரணை நீதிமன்றம், ஏப்ரல் 25-இல் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சா்ஜீல் இமாம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு எதிராக ஜூன் 5-ஆம் தேதி தில்லி காவல் துறையின் சாா்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சா்ஜீல் இமாம் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய விவகாரங்களில் அரசுக்கு எதிராக ஆத்திரத்தை தூண்டும் வகையில் தொடா்ந்து பேசி வந்தாா். அது தொடா்பான விசாரணையை தொடா்ந்து மேற்கொள்வதற்கு போதிய காரணம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா் ராவ் முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி, ‘இந்த விவகாரத்தில் கூடுதல் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய 10 நாள்கள் மேலும் அவகாசம் வேண்டும்’ என கோரப்பட்டது. இதையடுத்து, கூடுதல் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT