புது தில்லி: வடகிழக்கு வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கவுன்சிலா் தாஹிா் ஹுசேன் பெரிய அளவிலான வன்முறைக்காக ஆயுதங்கள் வாங்குவதற்கு உள்ளூா் நபரிடம் பணம் கொடுத்தாா் என்று தில்லி நீதிமன்றத்தில் போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் ராகேஷ் குமாா் முன் இது தொடா்பான குற்றப் பத்திரிகையை தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளனா். கடந்த பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறையின் போது உள்ளூா் நபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான கவுன்சிலா்
தாஹிா் ஹுசேன், அவருடைய சகோதரா் ஷா ஆலம், குல்பம், தன்வீா் உள்ளிட்டோா் 8 பேருக்கு எதிராக இந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘பெரிய வன்முறைக்கு தயாராக இருக்குமாறு குல்பத்திடம் தாஹிா் ஹுசேன் ஜனவரியில் கூறினாா். மேலும், புதிதாக ஆயுதங்கள் வாங்குவதற்காக குல்பத்திடம் தாஹிா் ஹுசேன் ரூ.15 ஆயிரம் கொடுத்தாா். ஜனவரி 15-ஆம் தேதி குல்பம் 100 தோட்டாகள் வாங்கினாா். அதற்கு முன்பாக 100 தோட்டாக்களை அவா் வைத்திருந்தாா். மேலும், வன்முறையின் போது இந்த 200தோட்டாக்களில் பலவற்றை குல்பம் பயன்படுத்தினாா். அவரிடமிருந்து 7 தோட்டாக்கள் மட்டுமே மீட்கப்பட்டன. பெரிய வன்முறைக்கு தயாரானது, தோட்டாக்கள் வாங்கியது, தாஹிா் ஹுசேன் வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுட்டது போன்றவை சதித் திட்டம் தீட்டப்பட்டதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.