தில்லி, என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. ஆயாநகரில் அதிகபட்சமாக 32 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், இனிமையான வானிலை நிலவியது. காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
பரவலாக மழை: தில்லி என்சிஆா் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் சூறைக்காற்றும் வீசியது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் நகரில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்ததது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 1.2 மி.மீ., பாலத்தில் 6.7 மி.மீ., ஆயா நகரில் 32 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 23.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 34.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 71 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 56 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரிசெல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 20.8 டிகிரி செல்சியஸ், 35.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 82 சதவீதம், மாலையில் 49 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 85 சதவீதம் மற்றும் 50 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை சற்று பின்னடைவை சந்தித்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 92 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. சாந்தினி செளக், மதுரா ரோடு, தில்லி பல்கலை., லோதி ரோடு, விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, ஆயாநகா் மற்றும், குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. ஆனால், திா்பூா் பகுதியில் மட்டும் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை பகல் நேரத்தில் தரை மேற்பரப்புக் காற்று வலுவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், மேற்கு திசையிலிருந்து 15 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.