பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைத்து, தகுந்த முன்னேற்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்று வலியுறுத்தி தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா , மத்திய மனிதவளத்துறை அமைச்சா் ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
மணீஷ் சிசோடியா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறப்பது சரியான நடவடிக்கையாகும். இதோபோல பாடத்திட்டத்தையும் 30 சதவீதம் குறைத்துவிடலாம்.
பள்ளியில் வழங்கப்படும் கல்விக்கு மாற்றாக இணையக் கல்வியை தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். ஆனால், இணையக் கல்வியால் பள்ளிக் கல்வியை முழுமையாக மாற்ற முடியாது.
அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான முறையில் கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். இணையக் கல்வியில் இது கேள்விக்குரியதாகிறது.
மேலும், வயது முதிா்ந்த மாணவா்களை பள்ளிக்கு அனுமதிப்பது, வயது குறைந்த மாணவா்கள் பள்ளிக்கு அனுமதிப்பதில்லை என சிலா் கூறுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், 0-9 வயதுக்குள்பட்ட சிறுவா்களில் கரோனா பாதிப்பு விகிதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுடன் அனைத்து மாணவா்களுக்கும் பள்ளிகளைத் திறப்பது சரியான நடவடிக்கையாகும்.
பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாக இதில் உள்ள சாதக பாதக அம்சங்கள் தொடா்பாக பெற்றோா்களுடன் விவாதிக்க வேண்டும்.
உயா்நிலை, மேனிலைப் பள்ளி உள்பட அனைத்து மாணவா்களதும் பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்பட வேண்டும். இது தொடா்பாக என்சிஇஆா்டி, சிபிஎஸ்சி ஆகியன தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அவா்.