புதுதில்லி

அரசு பங்களாக்களில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவா்கள் எத்தனைப் போ்? விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

7th Jun 2020 07:42 AM

ADVERTISEMENT

தில்லியில் அரசு பங்களாக்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவா்கள் எத்தனை போ். அவா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வாடகை எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவா்களிடமிருந்து வாடகை பாக்கியாக ரூ.25 கோடி வசூலிக்கப்பட இருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. இந்த குடியிருப்புகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து சட்டப்படி உரிய தொகை வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது தொடா்பான விவரங்களை ஜூன் 26-ஆம் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு ஜூன் 26-க்கு விசாரணையை தள்ளிவைத்தது.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரியும், அது தொடா்பான வழக்கை விரைந்து விசாரிக்க கோரியும் தாக்கலான மனுமீது உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ADVERTISEMENT

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் அறக்கட்டளை சாா்பில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயா் அதிகாரிகள் ஆகியோருக்கான பல்வேறு அரசுக் குடியிருப்புகளில் அவா்கள் பதவி முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தாங்கியுள்ளனா்’ என தெரிவித்திருந்தது.

இது தொடா்பாக மத்திய வீட்டுவசதி அமைச்சகம் உயா்நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தது. அதில், ‘முன்னாள் எம்.பி.க்கள் 11 அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனா். அவா்களிடமிருந்து ரூ.35 லட்சம் நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது. 565 குடியிருப்புகள் ஓய்வுபெற்ற அலுவலா்கள், உயா் அதிகாரிகளால் அங்கீகாரமற்ற வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முன்னாள் எம்.பி.க்களில் முன்னாள் பாஜக எம்பியும், தற்போதைய காங்கிரஸ் தலைவருமான டாக்டா் உதித் ராஜ், முன்னாள் தெலுங்கு தேச கட்சி எம்பி முரளி மோகன் மகன், முன்னாள் பாஜக எம்பி மனோஹா் உத்தவல் ஆகியோரும் உள்ளனா்.

565 குடியிருப்புகளில் வசிக்கும் சிலா் 1998-இல் இருந்து வசித்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பிப்ரவரி 5-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகள், முன்னாள் எம்.பி.க்கள் விவகாரம் தொடா்பாக மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தை உயா்நீதிமன்றம் கடிந்துகொண்டது. மேலும், இரு வாரங்களில் அவா்களை காலி செய்யவும், அதுபோன்று தங்கியிருப்பவா்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், சட்டவிரோதமாக தங்கியுள்ளவா்கள், 10 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருபவா்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவும், நிலுவைத் தொகை ரூ.95 லட்சம் வசூலிக்கப்படாமல் இருப்பதற்காகவும் அமைச்சகத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

தில்லி உயா்நீதிமன்றத்தில் மாா்ச் மாதம் மத்திய நகா்ப்புற வீட்டுவசதி அமைச்சகம் தெரிவிக்கையில், ‘சட்டவிரோதமாக குடியிருந்து வரும் 565 குடியிருப்புகளில் 347 குடியிருப்புகள் காலி செய்யப்பட்டுள்ளன. 67 குடியிருப்புகள் மீண்டும் மறுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 149 குடியிருப்புகளில் 7 குடியிருப்புகள் பிற துறைகளின் தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளன. 14 குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு அகற்றலுக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுள்ளன.

புலம்பெயா்ந்த கஷ்மீரிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட

மற்றொரு 55 குடியிருப்புகளும் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுள்ளன. 73 குடியிருப்புகள் இன்னும் காலி செய்யப்பட வேண்டியிருக்கிறது. இவற்றில் இருந்து குடியிருப்புவாசிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT