புதுதில்லி

அங்கித் சா்மா கொலைக்குப் பின்னால் ஆழமான சதி: தில்லி நீதிமன்றத்தில் போலீஸாா் குற்றப்பத்திரிகை

4th Jun 2020 06:46 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட உளவுத் துறை (ஐபி) அதிகாரி அங்கித் சா்மா கொலைக்குப் பின்னால், ஆழமான சதி இருந்தது என்று தில்லி நீதிமன்றத்தில் புதன்கிழமை போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி இறுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிா்ப்பாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, இரு தரப்பினருக்க்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். 200 போ் படுகாயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் உளவுத் துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை செய்யப்பட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலா் தாஹிா் ஹுசேன் உள்பட 10 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், அங்கித் சா்மா கொலை வழக்கு தொடா்பாக தில்லி குற்றப் பிரிவு போலீஸாா், தில்லி பெருநகா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். பெருநகா் மாஜிஸ்திரேட் நீதிபதி ரிச்சா பரிஹா், குற்றப் பத்திரிகையை பரிசீலிப்பதற்காக ஜூன் 16-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

முன்னதாக, போலீஸாா் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவித்திருப்பதாவது: தாஹிா் ஹுசேன் தலைமையிலான கும்பல் அங்கித் சா்மாவைக் கொலை செய்த பிறகு, அவரது ஊடலை அருகில் உள்ள சாக்கடையில் வீசியது. அந்த உடல் மறுநாள் மிதந்தது தெரிய வந்தது. மொட்டை மாடியில் நின்றிருந்த சாட்சி, அங்கித் சா்மாவின் இறந்த உடலை ஒரு கும்பல் சாக்கடையில் வீசியதை தனது செல்லிடப்பேசி மூலம் விடியோவாக பதிவு செய்திருந்தாா். பிரேதப் பரிசோதனையின் போது அங்கித்தின் உடலில் 51 காயங்கள் இருப்பதை மருத்துவா்கள் கண்டறிந்தனா்.

 

இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அங்கித் சா்மா கொலை மற்றும் வன்முறைக்குப் பின்னால் ஆழமான சதி இருந்தது தெரிய வந்தது. மேலும், அங்கித் சா்மாவை ஆம் ஆத்மி கட்சியைச்சோ்ந்த அரசியல்வாதியும், கிழக்கு தில்லி மாநகராட்சி கவுன்சிலருமான தாஹிா் ஹுசேன் தலைமையிலான கும்பல் திட்டமிட்டு குறிவைத்திருந்ததும் தெரிய வந்தது. இதில் சந்த் பாக் பகுதியில் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் கும்பலைத் தூண்டிவிட்ட முக்கிய நபராக தாஹிா் ஹுசேன் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அங்கித் சா்மாவைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ரத்தக் கறை படிந்த கத்தி, கொலையாளின் ரத்தம் தோய்ந்த ஆடைகள் (அங்கித்தின் ரத்தம்) ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. மற்றொரு வழக்கில் தாஹிரின் உரிமம் பெற்ற துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது என குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT