புதுதில்லி

அகில இந்திய தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசி மாணவா்களுக்கு 50% ஒதுக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

4th Jun 2020 06:43 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநில அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான  (பிசி மற்றும் எம்பிசி) 50 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள மாநிலச் சட்டத்தின்படி மருத்துவப் படிப்புகளில் பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநில அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பிசி மற்றும் எம்பிசி) 50 சதவீதம் இடங்களை மத்திய அரசு உரிய வகையில் ஒதுக்கீடு செய்வதில்லை.

மேலும், தமிழ்நாடு பிற்பட்ட வகுப்பினா், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் (மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி நியமனங்கள், பதவிகள் இடஒதுக்கீடு) சட்டம் 1993 (சட்டம் 45/1994)-இன்படி தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு ஓபிசி வகுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் 1854-இல் இருந்தே இடஒதுக்கீடு இருந்து வருகிறது. 1927-இல் இருந்து சில சாதிகளுக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்திலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. நாட்டில் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றும் வகையில் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆகவே, மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநில அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பிசி மற்றும் எம்பிசி) 50 சதவீதம் இடங்களை மத்திய அரசு உரிய வகையில் ஒதுக்கீடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் ஏற்கெனவே கடந்த மே 29-ஆம் தேதி ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழகத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான டிப்ளமோ மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளநிலை, முதுநிலை படிப்பில் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்காக மாநில அரசு ஒப்படைத்த இடங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (பிசி மற்றும் எம்பிசி) 50 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பிசி மற்றும் எம்பிசி) மாநில இடஒதுக்கீட்டை தமிழ்நாடு சட்டம் 1994-இன்படி தொடர வேண்டும். மேலும், இதர மாநிலங்களில் உள்ள மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களையும் பின்பற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இதேபோன்று, இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாமக சாா்பில் மே 28-ஆம் தேதி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT