வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கைதான ஜாமியா மிலியா இஸ்லாமியா முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் தலைவருக்கு எதிரான வழக்கு விசாரணையை முடிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், வடகிழக்கு வன்முறைச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் தலைவா் சிஃபா-உா்-ரகுமான் சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிகமான நிதியை வசூலித்துள்ளாா்.
மேலும், கணக்கில் வராத ஆதாரங்களிடமிருந்து இந்த நிதி பெறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு வெளியில் வசிக்கும் நபா்களிடமிருந்தும் அவருக்கு பணம் வந்துள்ளது. வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்திற்கு பின்னால் ஆழமான சதி தொடா்புடைய வழக்காக உள்ளது. மேலும், கரோனா நோய்த் தொற்று காரணமாக உள்ள பொது முடக்கத்தால் பிற மாநிலங்களில் போலீஸாா் நடத்த வேண்டிய சோதனைகள் தடைபட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சா்ஜீல் இமாமுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆகவே, ரகுமானிடம் விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தா்மேந்தா் ராணா, சிஃபா -உா்-ரகுமானிடம் விசாரணையை முடிக்க தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸாருக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்குமாறு ஒரு மாதம் அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.
வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி இறுதியில் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ரகுமானை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் ஏப்ரல் மாதத்தில் கைது செய்தனா். அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினராகவும் சிஃபா-உா்-ரகுமான் இருப்பது குறிப்பிடத்தக்கது.