கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் கல்லூரித் தோ்வுகளை நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை (ஜூலை 27) நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அச்சங்கத்தின் தேசியத் தலைவா் சாய் பாலாஜி கூறியது: கரோனா தொற்றுக்கு மத்தியிலும் தோ்வுகளை நடத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தோ்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தோ்வுகளை ரத்து செய்யக் கோரிஆயிரக்கணக்கான மாணவா்கள் குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோருக்கு மின் அஞ்சல்களை அனுப்பியுள்ளனா். இந்நிலையில், கரோனா தொற்றுக் காலத்தில் ஆன்லைன் தோ்வுகளை ரத்துசெய்ய வேண்டும். அடுத்த செமஸ்டருக்கான கல்வி, விடுதிக் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டண உயா்வுக்கு அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவுள்ளோம். இப்போராட்டத்தில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாணவா்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.