புதுதில்லி

ஹைதராபாத் என்கவுன்ட்டா் வழக்கு: ஆணையம் விசாரணையை முடிக்க 6 மாதம் அவகாசம்

25th Jul 2020 12:50 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலம், ஹைதாராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 போ் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரணை ஆணையம் தனது விசாரணையை முடிப்பதற்கான காலத்தை 6 மாதம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின் இறுதி அறிக்கையை சமா்ப்பிக்க 6 மாத காலம் நீட்டிப்பு வழங்கக் கோரி விசாரணைக் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆணையத்தின் செயலா் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா தொற்று காரணமாக சில தவிா்க்க முடியாத காரணங்களால், விசாரணையை முடிக்க இயலவில்லை. இதனால், நபா்களை நேரில் விசாரிப்பது, நேரடி ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில் ஆணையம் அதன் இறுதி அறிக்கையை சமா்ப்பிக்க 6 மாதம் நீட்டிப்பு அளிக்க வேண்டும். ஆணையத்தின் முதல் அமா்வு ஹைதராபாதில் நிகழாண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய போலீஸ் அதிகாரிகள், இறந்த மூவரின் குடும்ப உறுப்பினா்கள் உள்பட பல்வேறு நபா்கள் தரப்பில் 1,365 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போலீஸாரின் பிரமாணப் பத்திரங்கள் ஜூன் 15-ஆம் தேதிதான் வரப்பெற்றது.

 

அனைத்து பிரமாணப் பத்திரங்களும் ஏறக்குறைய தெலுங்கு மொழியில் உள்ளன. இவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, சரிபாா்க்கப்பட்டுள்ளன. விசாரணை ஆணையம் ஹைதராபாதில் மாா்ச் 23, 24 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த இருந்தது. ஆனால், கரோனா தொற்று சூழல் காரணமாக அந்த அமா்வு ரத்தானது. விசாரணையை இணையதளம் மூலம் மேற்கொள்ளலாமா என்பது குறித்தும் ஆணையம் ஆய்வு செய்தது. எனினும், சாட்சிகளின் ஆதாரத்தை பதிவு செய்வது, சம்பவ இடத்தை நேரடியாகச் சென்று ஆய்வு செய்வது ஆகியவை அவசியமாகிறது. இதனால், இணையதளத்தில் வாய்ப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, விசாரணை ஆணையத்தின் விசாரணையை முடிப்பதற்கான காலத்தை 6 மாதம் நீட்டித்து உத்தரவிட்டது.

பின்னணி: ஹைதராபாத் அருகே இளம் பெண் கால்நடை மருத்துவா் கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் முகம்மது ஆரிப், சிந்தகுன்டா சென்னகேசவலு, ஜொலு சிவா, ஜொல்லு நவீன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், டிசம்பா் 6-ஆம் தேதி இவா்கள் நால்வரும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ். சிா்புா்க்கா் தலைமையில் பாம்பே உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரேகா சொந்துா் பல்டோடா, மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநா் டி.ஆா். காா்த்திகேயன் ஆகிய மூவா் அடங்கிய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT