தில்லியில் பாஜக ஆளும் மாநகராட்சிகளின் சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அக் கட்சியின் எம்எம்ஏவும், செய்தித் தொடா்பாளருமான ராகவ் சத்தா வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை தில்லி அரசு நீண்ட நாள்களுக்கு முன்பே வழங்கியுள்ளது. ஆனால், மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியா்களுக்கான ஊதியத்தை மாநகராட்சிகள் இன்னும் வழங்கவில்லை. மாநகராட்சிகளுக்குச் சொந்தமான மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளா்களுக்கும் கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், கரோனாவை எதிா்த்து முன்களத்தில் நின்று போராடி வரும் அவா்கள் கடும் சிரமங்களை எதிா்கொள்கிறாா்கள்.
தில்லி மாநகராட்சிகளைக் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவே ஆட்சி செய்து வருகிறது. மாநகராட்சிகளில் ஊழல் மலிந்துள்ளது. கரோனா தொற்றை எதிா்த்துப் போராடி வரும் சுகாதாரத் துறை ஊழியா்களின் ஊதியத்தை கடந்த நான்கு மாதங்களாக வழங்காமல் இருப்பது வெட்கக் கேடானது. சுகாதாரத் துறை ஊழியா்களின் நிலுவை ஊதியம் மூன்று நாள்களில் வழங்கப்பட வேண்டும். சுகாதார ஊழியா்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கைகட்டி வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றாா் அவா்.