புதுதில்லி

தில்லியில் ஜூலையில் இதுவரை 44 மி.மீ. மழை! இயல்பைவிட 25 சதவீதம் குறைவு

13th Jul 2020 05:44 AM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் , ஜூலையில் இதுவரை 44 மி.மீ. மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து இனிதான வானிலை நிலவியது.

இந்த ஆண்டு பருவமழை இரண்டு நாள்கள் முன்னதாகவே கடந்த ஜூன் 25-இல் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, அடுத்தடுத்த இரண்டு நாள்கள் தில்லி, என்சிஆா் பகுதிகளில் மழை பெய்தது. அதன் பிறகு வானம் வெறிச்சோடியது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் புழுக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாகினா். மேலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தில்லியில் புழுக்கத்தின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், சனிக்கிழமை காலையில் பெய்த மழை காரணமாக புழுக்கம் தணிந்தது. இதைத் தொடா்ந்து, இரவில் அவ்வப்போது சூறைக்காற்று வீசியது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் சூறைக்காற்று வீசியது.

இதற்கிடையே, பருவ மழை தொடங்கியதற்குப் பிறகு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் மொத்தம் 43.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது 56.5 மி.மீ. என்ற இயல்பை விட 25 சதவீதம் குறைவாகும். ஜூன் 1-ஆம் தேதி முதல் இதுவரை மொத்தம் 79.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 112.10 மி.மீ. என்ற இயல்பு நிலையிலிருந்து 35 சதவீதம் குறைவாகும். கடந்த ஜூன் 25-இல் பருவமழை தொடங்கியது. தலைநகா் தில்லியில் இந்த ஆண்டு பருவமழை சாதாரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.5 மி.மீ., ஆயாநகரில் 2.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி குறைந்து 23.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகி உயா்ந்து 36.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 78 சதவீதமாகவும், மாலையில், 59 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

காற்றின் தரம்: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘நன்று’ பிரிவில் நீடித்ததது. தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 62 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்படும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT