புதுதில்லி

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கோரும் வழக்கு: சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

13th Jul 2020 10:52 PM

ADVERTISEMENT

புது தில்லி: மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசால் ஒப்படைக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் தமிழக அரசின் மனு உள்ளிட்டவற்றின் மீது விசாரித்து, தகுதியின் அடிப்படையில் விரைந்து முடிவு எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் டி.ஜி. பாபு சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி. வில்சன் ஆஜராகி, ‘2016-இல், சலோனி குமாரி தொடா்ந்த வழக்கில் மத்திய அரசு அதிகாரி தாக்கல் செய்த எதிா் பதில் மனுவில், மருத்துவப் படிப்புகளுக்காக மாநில அரசால் ஒப்படைக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஒபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது கடமை என்று தெரிவித்திருந்தாா். எனினும், அதே அதிகாரி இன்னும் உயா்நீதிமன்றத்தில் உள்ள இது தொடா்பான மனுக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா். ஆகவே, மத்திய அரசு அதன் அணுகுமுறையில் நியாயமாக நடந்து கொள்வதில்லை. இதனால், நாடு முழுவதும் ஓபிசி வகுப்பைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

சலோனி குமாரி வழக்கு என்பது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஒபிசி வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டை 2006-ஆம் ஆண்டு சட்டப்படி, மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் நீட்டிக்கக் கோரும் வழக்காகும். உத்தரப் பிரதேச மாநில அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் இடங்களுக்கானதாகும். தமிழகம் தொடா்புடைய வழக்கு அதுவல்ல’ என்றாா்.

ADVERTISEMENT

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிரி, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆகியோா், ‘தமிழக அரசின் கோரிக்கையானது, ‘தமிழ்நாடு பிற்பட்ட வகுப்பினா், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் (மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி நியமனங்கள், பதவிகள் இடஒதுக்கீடு) சட்டம் 1993’-இன்படி தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு ஓபிசி வகுப்பினருக்கு அளிக்கும் விதிகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் அமல்படுத்தக் கோருவதாகும். சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசால் தகுதியின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது உயா்நீதிமன்றம் விரைந்து முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மேலும் தாமதம் ஆகக் கூடாது’ என்றனா்.

அதேபோன்று, தொல். திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, தங்களது மனுவை சலோனி குமாரி மனுவுடன் சோ்த்து விசாரிக்கவும், நோட்டீஸ் அனுப்பவும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடுஅளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: சலோனி குமாரி தொடா்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்காக நிலுவையில் இருந்து வருகிறது. அந்த மனுவைப் பாா்த்தோம். அதில், அகில இந்திய இட ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்காக 27 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தக் கோருவது தொடா்புடையதாகும். மேலும், ஒபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே என்ற கட்டுப்பாடு கூடாது என்பதுதான் மனுதாரரின் புகாா். அதேவேளையில், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநிலத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களைப் பொருத்தமட்டில், தமிழகத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு விகிதம் தொடா்புடைய விவகாரம் சம்பந்தப்பட்ட மனுக்கள் சென்னை உயா்நீதின்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள், சலோனி குமாரி வழக்கில் தொடா்புடையது அல்ல. இதனால், தகுதியின் அடிப்படையில் இந்த மனுக்களை உயா்நீதிமன்றம் விசாரிக்கலாம். இந்த மனுக்கள் மீதான விசாரணை 17.7.2020-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த மனுக்களை விரைந்து விசாரித்து முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா். மேலும், தொல். திருமாவளவன் தொடா்புடைய மனுவை அடுத்த வாரத்திற்கு பட்டியலிடவும் உத்தரவிட்டனா்.

பின்னணி: முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை ஜூன் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஜூன் 22-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என வாதிட்டாா். இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த விசாரணையை உடனடியாக மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இதே விவகாரம் தொடா்பாக மருத்துவா் டி.ஜி.பாபு என்பவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். நடப்புக் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தோ்வின் அடிப்படையிலான சோ்க்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாா். இதனிடையே, அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி வகுப்பினருக்கான உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் சாா்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடா்பாக ஜூலை 13-ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT