புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய அனைத்து மனுக்கள் மீதும் பதில் தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்களில் சிலவற்றுக்கு மட்டுமே தில்லி காவல் துறை பதில் தாக்கல் செய்துள்ளதாகவும், அனைத்துக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த விவகாரம் தொடா்பான மனுக்களை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் விசாரித்தது. அப்போது, ‘சில மனுக்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பதிலை தில்லி காவல் துறை தாக்கல் செய்துள்ளது. இதனால், இரு தினங்களில் அனைத்து மனுக்கள் மீதும் தில்லி காவல் துறை பதில் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. ஏதாவது மறுப்பு பதில் இருந்தால், நான்கு நாள்களில் அவற்றைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
முன்னதாக, விசாரணையின் போது தில்லி காவல் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜத் நாயா், ‘அனைத்து மனுக்களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலை தாக்கல் செய்துள்ளோம்’ என்றாா். அதற்கு நீதிபதிகள், ‘அனைத்து மனுக்களுக்கும் தில்லி காவல் துறை பதில் தாக்கல் செய்ய வேண்டும். எதிா் பதில், பதில் மறுப்பு ஆகியவற்றின் நகலை வழக்கில் தொடா்புடைய அனைவருக்கும் அடுத்த விசாரணை நடைபெறும் ஜூலை 21-ஆம் தேதிக்கு முன் வழங்க வேண்டும்’ என்றனா்.
சில மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காலின் கோன்சால்வேஸ் ‘மூன்று மனுக்களுக்கு போலீஸாா் பதில் அளிக்கவில்லை. அவை போலீஸாா் தாக்கியதில் கடுமையாக காயமடைந்தவா்களுக்கு இழப்பீடு கோருவது, சம்பவத்தில் தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோருவது உள்ளிட்டவையாகும். மொத்தம் தாக்கலான 9 மனுக்களில் ஆறு மனுக்களுக்கு மட்டுமே போலீஸாா் ஒருங்கிணைந்த பதிலை தாக்கல் செய்துள்ளனா்’ என்றாா்.