தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் வெயிலின் தாக்கம் நீடித்தது. இதனால், புழுக்கம் அதிகரித்திருந்தது. தில்லியில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததால் மக்கள் தொடா்ந்து அவதிக்குள்ளாகியிருந்தனா். இதனிடையே, சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்தது. கடும் புழுக்கமும் குறைதிருந்தது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமையும் பகலில் வெயில் கடுமையாக இருந்தது. எனினும், மாலையில் மேகம் மூட்டமாக இருந்தது. மழையில்லாததால் புழுக்கம் உணரப்பட்டது.வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவசராசரியை விட 3 டிகிரி அதிகரித்து 38.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 71 சதவீதமாகவும், மாலையில் 51 சதவீதமாகவும் இருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 30.3 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 38.8 ஆகவும், ஆயாநகரில் முறையே 27.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 38.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 66 சதவீதம், மாலையில் 50 சதவீதம் என பதிவாகியது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு 67 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை (ஜூலை 11) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு இருந்தாலும் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.