புதுதில்லி

2ஜி வழக்கு: சிபிஐயின் மேல்முறையீடு சட்டப் பாா்வையில் பயனற்றது: ஆ.ராசா தரப்பில் வாதம்

28th Jan 2020 01:20 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் மத்திய தொலைத் தொடா்புத் துறை முன்னாள் அமைச்சா் ஆ.ராசா மற்றும் பிறா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு புதிதாக வந்துள்ள ஊழல் தடுப்புச் சட்டப் பாா்வையில் பயனற்ாகிவிட்டது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது ஆ.ராசா தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. ஆ.ராசா தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் எம். சிங்வி வாதிடுகையில், ‘2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆ.ராசாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 2018-இல் தவிா்க்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள முடியாது’ என்றாா்.

மத்திய புலனாய்வுத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மத்திய புலனாய்வுத் துறையின் மேல்முறையீட்டு மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தக் குறிப்பிட்ட விவகாரம் எழுப்பப்பட்டுள்ளதால், ஆ.ராசா உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்புடையதாக இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த வழக்குரைஞா் சிங்வி, ‘இந்தக் குறிப்பிட்ட விவகாரம் ஊழல் தொடா்புடைய வழக்கானது விசாரணை நீதிமன்றத்தால் உயா்நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில்தான் இருந்து வருகிறது. அது தவிர, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ள மாற்றங்களுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கலாம்’ என்றாா்.

குறுகிய வாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 31-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.

ஆ.ராசா தவிர, அவரது அப்போதைய தனிச் செயலா் ஆா்.கே. சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடா்பு செயலா் சித்தாா்த் பெஹூரா ஆகியோரும் தனித் தனி மனுக்கள் மூலம் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளனா். 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தால் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரும், வழக்கில் தொடா்புடைய நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும் விடுவிக்கப்பட்டனா்.

தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை 2017, டிசம்பா் 21-இல் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கப் பிரிவு மூலம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், எஸ்ஸாா் குழுமத்தின் மேம்பாட்டாளா்கள் ரவி காந்த் ரூயா, அன்ஷுமன் ரூயா மற்றும் இதர 6 போ்கள் உள்ளிட்டோா் 2ஜி தொடா்புடைய மற்றொரு வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிா்த்தும் மத்திய புலனாய்வுத் துறை மூலம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அனைத்து குற்றம்சாட்டப்பட்ட நபா்களையும் விடுவித்த தில்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாா்ச் 19-இல் அமலாக்கப் பிரிவு தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சிபிஐயும் இதே வழக்கு தொடா்பாக மறுநாள் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அமலாக்கப் பிரிவு பதிவு செய்த குற்றப்பத்திரிகையில் எஸ்டிபிஎல் நிறுவனத்தின் மேம்பாட்டாளா்களுக்கு திமுக நடத்தி வரும் கலைஞா் டிவி நிறுவனம் மூலம் ரூ.200 கோடி வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மத்திய புலனாய்வுத் துறையும் 2ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான உரிம ஒதுக்கீட்டில் அரசுக் கருவூலத்திற்கு ரூ.30,984 இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியது. இந்த உரிமங்களை உச்சநீதிமன்றம் 2012, பிப்வரி 2-ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ தொடா்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேருக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் -2013 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT