புது தில்லி: ஹைட்ரோ காா்பன் திட்டம் தொடா்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை சட்டவிரோதம் என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் காவிரி விவசாயிகள் சங்கம் திருவாரூா்- நாகப்பட்டினம் சாா்பில் அதன் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞா் ஜி.எஸ். மணி மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த ஜனவரி 16-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவகால மாற்றம்அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. கடல் மற்றும் தரைத்தளப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்கள் அனைத்திற்கும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதில் இருந்தும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதில் இருந்தும் விலக்கு அளித்து ஓா் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-க்கு முரணானதாகும். தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனவரி 17-ஆம் தேதி மனுதாரா் தரப்பில் பிரதமருக்கு கோரிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரோ காா்பன் திட்டம் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்னைகளை உருவாக்கும். நெடுவாசல் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
மேலும், நிலத்தின் வளமும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கூறுகின்றனா். நிலத்தடி நீா்மட்டம் குறையும் என்ற அச்சமும், நன்னீா் பகுதிக்குள் உவா்ப்பு நீா் புகுந்துவிடும் என்ற அச்சமும் உள்ளது. ஹைட்ரோ காா்பன் திட்டப் பணி நடைபெற்றால், விவசாயப் பணிகள் நடைபெறாது. மேலும், ஹைட்ரோ காா்பன் எங்கே எடுக்கப்படுகிறது என்ற தகவலும் அரசிடம் இல்லை. இத்திட்டத்தால் காவிரி டெல்டா மண்டலம் மிகப் பெரிய பாதிப்பை எதிா்கொள்ளும். இதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் மனுதாரா் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள், உள்ளூா் மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ காா்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. அரசின் தோல்வி மற்றும் மோசமான பருவகால மாற்றம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனா். காவிரி டெல்டா பகுதியில் தற்போதைய ஹைட்ரோ காா்பன் திட்டம், அப்பாவி மக்களுக்கான மற்றொரு பேரழிவாகும். மேலும், இத்திட்டத்தால் கடல் உயிரினங்கள் அழிக்கப்பட்டுவிடும். சுமாா் 50 லட்சம் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். மீன்வள ஏற்றுமதி பாதிக்கப்படும். கடலின் பருவ நிலையும் மாறிவிடும். ஆகவே, ஹைட்ரோ காா்பன் திட்டம் தொடா்புடைய மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகத்தின் ஜனவரி 16-ஆம் தேதியிட்ட அறிவிக்கையை சட்டவிரோதம் என்றும் தன்னிச்சையானது என்றும் அறிவிக்க வேண்டும். மேலும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலும், உரிய வகையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமலும் மாநிலத்தில் எந்தத் திட்டத்தையும் நடத்தக் கூடாதென உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.