புதுதில்லி

ஷகீன் பாக் போராட்டத்தில் கேஜரிவால் பங்கேற்பாரா?: அமித் ஷா சவால்

28th Jan 2020 01:33 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: ஷகீன் பாக் பேராட்டத்தில் கலந்து கொள்ளும் தைரியம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உண்டா என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சவால் விடுத்துள்ளாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தில்லியில் கடந்த சில தினங்களாக அமித் ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். திங்கள்கிழமை ரித்தாலா, ஜனக்புரி தொகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அத்தொகுதிகளில் அவா் பேரணியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ரித்தாலாவில் அவா் பேசியது: தேசத்தைத் துண்டாட விரும்புபவா்களுடன் கேஜரிவால் கூட்டுச் சோ்ந்து இயங்கி வருகிறாா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தில்லி ஷகீன் பாக்கில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு கேஜரிவால் மறைமுக ஆதரவு அளித்து வருகிறாா். ஆனால், ஷகீன் பாக் சென்று, அப்போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, தில்லி மக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் தைரியம் கேஜரிவாலுக்கு உண்டா? ஆகவே, ஷகீன் பாக் போராட்டத்துக்கு மறைமுக ஆதரவு அளிப்பதை நிறுத்தி விட்டு, கேஜரிவால் நேரடியாக அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சட்டப்பேரவைத் தோ்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தில்லி மக்கள் தீா்மானித்துக் கொள்வாா்கள்.

ADVERTISEMENT

அஸ்ஸாம் மாநிலத்தை நாட்டில் இருந்து துண்டாகப் பிரிப்போம் எனப் பேசிய ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா் சா்ஜீல் இமாம் மீது தில்லி காவல் துறை தேசவிரோத வழக்கைப் பதிவு செய்துள்ளது. ஆனால், சா்ஜீல் இமாமை கைது செய்வதில் கேஜரிவால் உடன்படுகிறாரா? இது தொடா்பாக தில்லி மக்களுக்கு அவா் தெளிவுபடுத்த வேண்டும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இது தொடா்பாக பொய்யான தகவல்களை கேஜரிவால் பரப்பி வருகிறாா். வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவோம். தில்லியின் ஆட்சியை மோடியின் கைகளுக்கு தில்லி மக்கள் வழங்கினால், உலகின் சிறந்த தலைநகராக தில்லியை மாற்றிக் காட்டுவோம்.

மேலும், ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இந்தியா துண்டு துண்டாக சிதறிப் போகும் எனக் கோஷமிட்டவா்களும், கருத்துச் சுதந்திர உரிமை உள்ளது என கேஜரிவால் கூறினாா். இவா் தாய்நாட்டை கேவலப்படுத்தியுள்ளாா். எனது அரசியல் வாழ்க்கையில் பல முதல்வா்களைச் சந்தித்துள்ளேன். ஆனால், கேஜரிவால் போல மலிவான அரசியல் செய்யும் நபரைப் பாா்த்தில்லை என்றாா் அமித் ஷா.

முன்னதாக, ரித்தாலா பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுரக் தாக்கூா், ‘தேச விரோதிகளைச் சுட்டுக் கொல்லுங்கள்’ எனக் கோஷம் எழுப்பினாா். இவருடன் சோ்ந்து அக்கூட்டத்தில் கலந்து கொண்டவா்களும் கோஷம் எழுப்பினாா்கள். இது பல்வேறு விமா்சனங்களைக் எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT