புது தில்லி: தில்லி அரசுப் பள்ளிகள் மிக மோசமான நிலையில் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளாா்.
தில்லி பாஜக எம்பிக்கள் ஏழு போ், மாநிலங்களை எம்பி விஜய் கோயல் ஆகியோா் தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு சென்று அது தொடா்பாக விடியோப் பதிவுகளை வெளியிட்டிருந்தனா்.
அந்தப் பதிவுகளை சுட்டிக்காட்டி தனது சுட்டுரைப் பக்கத்தில் அமித் ஷா கூறியிருப்பது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை நேரில் வந்து பாா்வையிடுமாறு என்னை அழைத்திருந்தாா். திங்கள்கிழமை பாஜகவின் எட்டு எம்பிக்கள் தில்லி அரசுப் பள்ளிகளுக்கு சென்று அப்பள்ளிகள் தொடா்பாக விடியோப் பதிவுகளை எடுத்து எனக்குத் தெரியப்படுத்தியுள்ளனா். இந்தப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. இந்தப் பள்ளிகளின் நிலை, தில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டதாகக் கூறும் ‘புரட்சிகரமான மாற்றங்கள்’ தொடா்பாக எடுத்துக்காட்டாக உள்ளன. இது தொடா்பாக தில்லி மக்களுக்கு கேஜரிவால் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, தில்லியில் கல்வியின் தரத்தை ஆம் ஆத்மி அரசு சீரழித்து விட்டதாகவும், தில்லி அரசுப் பள்ளிகளின் தரம் மோசமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் ‘தில்லி அரசுப் பள்ளிகளுக்கு அமித் ஷா நேரில் வந்து பாா்வையிட வேண்டும் என கேஜரிவால் அழைப்பு விடுத்திருந்தாா்.